Show all

சூர்யாவின் 24 தமிழ்த் திரைப்படம் ஹாலிவுட் படமோ என்கிறவாறான ஆச்சரியத்துடன்

படத்தின் தொடக்கக் காட்சிகள் நாம் காண்பது தமிழ்த் திரைப்படமா அல்லது ஹாலிவுட் படமா என்கிற ஆச்சரியத்தை உண்டுபண்ணி, ஒரு பெரிய கொண்டாட்டத்துக்கு நம்மைத் தயார்படுத்திவிடுகிறது. மறக்கமுடியாத நிமிடங்கள் அவை.

 

டைம் டிராவல் தொடர்புடைய கைக்கடிகாரத்தைக் கண்டுபிடிக்கிறார் தம்பி சூர்யா (சேதுராமன்).

அதேவேளையில் கைக்கடிகாரத்தைக் கைப்பற்ற தம்பி குடும்பத்தைக் கொல்லத் துடிக்கிறார் அண்ணன் சூர்யா (ஆத்ரேயா). குழந்தையையும் கைக்கடிகாரத்தையும் தொடர்வண்டியில் பயணிக்கும் சரண்யாவிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் துறக்கிறார் தம்பி சூர்யா. கூடவே அவரது மனைவி நித்யா மேனனும்.

 

கதை 26 வருடங்கள் கழித்து அந்தக் குழந்தை, வாலிபனாக உள்ள காலகட்டத்துக்கு வருகிறது. கோமாவில் இருந்து மீளும் வில்லன் சூர்யா, அந்த கைக்கடிகாரத்தைத் தன்வசமாக்கிக்கொள்ள எண்ணுகிறார். அவர் விரித்த வலையில் சூர்யா (மணி) விழுகிறார். இறுதியில் அதே கைக்கடிகாரத்தை வைத்து தன் தாய், தந்தையைக் கொன்ற வில்லனைப் பழிதீர்க்க திட்டம் போடுகிறார் சூர்யா.

 

முதல் கால் மணி நேரம், இயக்குநர் விக்ரம் குமாரின் திறமை முன்பு ரசிகர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள். ஆனால் சூர்யா - சமந்தா காதல் காட்சிகள் தொடங்கியவுடன் படம் ஒரு நிலையில்லாமல் ஆங்காங்கே சறுக்க தொடங்குகிறது. டைம் டிராவல் தொடர்புடைய ஒரு படத்தில் அதன் காட்சிகள் தானே படத்துக்கு மேலும் வலு சேர்க்கவேண்டும். ஆனால் இங்கே திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் காட்சிகள் இழுவையாகும் அளவுக்கு ரசிகர்கள் நோகடிக்கப்படுகிறார்கள். ஆனால் மணியும் ஆத்ரேயாவும் சந்திக்கும் அந்த இடைவேளைக் கட்டம் மீண்டும் இழந்த சுறுசுறுப்பை மீட்டுத் தருகிறது.

 

இடைவேளைக்குப் பிறகு கதையில் சில நல்ல திருப்பங்கள் ஏற்பட்டாலும் அதே காதல் காட்சிகளால் மீண்டும் தொய்வு நிலை உண்டாகிறது. தொகுப்பாளரும் இயக்குநரும் அசட்டையாக இருந்த இடங்கள் இவை. வளர்ப்புத் தாய் சரண்யாவின் ஊருக்குச் செல்லும் சூர்யா, சமந்தா தான் முறைப்பெண் என்று அறிந்துகொள்கிறார். இந்த இடத்தில் எந்தவித கைக்கடிகார உதவியும் இன்றி பழங்காலத்துக்குச் சென்றுவிடுகிறது திரைக்கதை அமைப்பு.

 

அதுதவிர டைம் டிராவல் தொடர்பாக நிறைய கேள்விகள் உண்டாகின்றன. வில்லன் ஆத்ரேயா - தம்பி சேதுராமன் இடையே அப்படி என்னதான் பகை? எதற்காக ஆத்ரேயாவுக்கு அந்த கைக்கடிகாரம் தேவைப்படுகிறது? மேலும் அந்தக் கைக்கடிகாரத்தால் இறந்த காலத்தைக் கலைப்பது குழப்பத்தை உண்டுபண்ணுகிறது. எனில், அதை வைத்து இன்னும் சுவாரசியமாகக் காட்சிகளை அமைத்திருக்கலாமே! ஒரு குழப்பத்துடன் கைக்கடிகார வடிவமைப்புப் போட்டியில் கலந்துகொள்ளும் சூர்யா, அடுத்தநாள் என்ன நடக்கும் என்பதை அதே கைக்கடிகாரத்தை வைத்து கண்டுபிடித்திருக்கலாமே?

 

அந்த கைக்கடிகாரத்தை வைத்து சூர்யா நிகழ்த்தும் சில காட்சிகள் அபாரம். மழைத்துளி மற்றும் தோனியிடம் செல்பி எடுக்கும் காட்சிகளுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு. வில்லன் ஆத்ரேயா கதாபாத்திரத்தில் சூர்யா அசத்திவிட்டார். இன்னும் கொஞ்சம் வில்லத்தனம் இருந்திருக்கலாமே என்கிற ஏக்கமும் உண்டுதான்! சமந்தாவுக்கு நிறைய காட்சிகள் என்றாலும் அவை பெரிய வேகத்தடையாக அமைந்துவிட்டன.

 

திருவின் ஒளிப்பதிவு, படத்தின் மீதான பிரமிப்புக்கு முக்கிய காரணம். அவரளவில் இது மறக்கமுடியாத படம். கலை இயக்கம் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தின் தரத்தை பல படிகள் உயர்த்தியுள்ளன. ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் இனிமை. இருந்தாலும் அந்தக் கடைசிப் பாடல் தவறான இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

முதல் பாதியில் கிடைத்த பல சுவாரசியமான அனுபவங்களை இரண்டாம் பாதியில் தேடவேண்டிய நிலைமை. கதை மீண்டும் 1990-க்கே செல்கிறபோது ஆர்வம் அதிகமாகிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்குச் சற்றுக் குறைவாகவே உச்சகட்டக் காட்சிகள் அமைந்துள்ளன. டைம் டிராவல் படமாக இருந்தாலும் அது கடைசியில் மற்றொமொரு பழிக்குப் பழி வாங்கும் கதையாக உள்ளதும் சிறு ஏமாற்றமே!

 

சில அடிப்படையான குறைகளைக் களைந்திருந்தாலே 24 படம், பல மறக்கமுடியாத அனுபவங்களைத் தந்திருக்கும். இதனால் மிகச்சிறந்த படமாக இல்லாமலும் சுமாரான படமாக இல்லாமலும் இரண்டுக்கும் நடுவில் நின்று திருப்திப்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.