Show all

பிர்லா கோளரங்கத்தில் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் கோளரங்கம்.

சென்னையில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கத்தில் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் கோளரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பிறகு, உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் வெளியிட்ட அறிவிப்புகள்:

வானவியல் கருத்துக்களை சிறப்பான ஒளி- ஒலி அம்சங்களுடன் மாணவர் சமுதாயம் காணும் வகையில், ரூ. 10 கோடி செலவில், மின்னணுக் கருவியுடன் கூடிய புதிய டிஜிட்டல் கோளரங்கம் அமைக்கப்பட உள்ளது. இது மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்துவதாக அமையும்.

மின் நுகர்வுக் கட்டணத்தைக் குறைக்கும் வகையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகங்களுக்கும், புதிதாகக் கட்டப்படும் வளாகத்துக்கும் சூரிய சக்தி மூலமான மின்சாரம் கிடைக்கும் வகையில் ரூ. 52.50 லட்சம் செலவில் சூரிய மின் உற்பத்தி அமைப்பு உருவாக்கப்படும்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முழு நேர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் வகையில் ரூ. 8.44 கோடி செலவில் கல்விப்புல கட்டடம் கட்டப்படும்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 112 இணைப்புக் கல்லூரி மாணவ, மாணவிகள் நீச்சல் போட்டியில் தலைசிறந்து விளங்கும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 5.95 கோடி செலவில் சர்வதேசத் தரத்திலான நீச்சல்குளம் அமைக்கப்படும். மேலும் தலா ரூ. 5.5 கோடியில் மகளிர் விடுதி ஒன்றும், மாணவர் விடுதி ஒன்றும் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்படும்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ. 2.4 கோடியில் அறிவியல் சார்ந்த விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய உடல் தகுதி மையம் அமைக்கப்படும். மேலும், ரூ. 3.50 கோடியில் மனிதவள மேம்பாட்டு மையம் ஒன்றும், ரூ. 1.7 கோடி செலவில் நன்னீர் வாழ் நுண்பாசிகள், சயனோ பாக்டீரியாக்கள் சேமிப்பதற்கான தேசியக் களஞ்சியம் ஒன்றும் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும். அத்துடன், ரூ. 1.7 கோடி செலவில் காஜாமலை வளாகத்தில் மகளிர் விடுதி ஒன்றும் கட்டப்படும்.

தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஆற்றல்சார் பணியாளர்களை உருவாக்கும் வகையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் திறன் அடிப்படையிலான வாழ்க்கைத் தொழில் சார்ந்த நெசவு, உணவு அறிவியல் இளநிலை பட்டப் படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.