Show all

பொங்கலுக்குள் வெளியாகவிருக்கிற தமிழ்படங்கள் எண்ணிக்கை 30! பொங்கலுக்கு இருப்பதோ இன்னும் 45 நாட்கள்

பொங்கல் விழாவிற்கு இன்னும் 45 நாட்கள் முழுமையாக உள்ளன. ஆனால் அதற்கு முன்பாகவே, அடுத்த 30 நாட்களுக்குள், தமிழில்  30 புதிய படங்கள் வெளியாகவுள்ளனவாம். 

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி, மாதவன்-அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் உள்பட 30 தமிழ்ப் படங்கள் அடுத்து வரும் முப்பது நாட்களில் வெளியாகவுள்ளன.

பொங்கலுக்கு முன்பாக இந்த ஆண்டு முடிந்து அடுத்த ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கவிருக்கிற நிலையில் ஆண்டு இறுதிக்குள்ளாகவே, பெரிய மற்றும் சிறிய செலவுத்திட்டத்தில் தயாரான 30-க்கும் மேற்பட்ட படங்களை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ்-ஆனந்தி நடித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, தனுசு ராசி நேயர்களே, சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள பேய் படமான இருட்டு, ஜடா ஆகிய படங்கள் கார்த்திகை 20 அன்று (டிசம்பர் 6) வெளிவருகின்றன.

பரத் நடித்துள்ள காளிதாஸ் கார்த்திகை 27 அன்றும் (டிசம்பர் 13) மாதவன்-அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் கார்த்திகை 30 அன்றும் (டிசம்பர் 16) வெளிவருகிறது. சுசீந்திரன் இயக்கி உள்ள சாம்பியன் மார்கழி முதல்நாளில் (டிசம்பர் 17) வருகிறது. ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள், ஜீவாவின் சீறு, விமலின் கன்னிராசி, சிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி ஆகிய படங்கள் மார்கழி நான்காம் நாளில் (டிசம்பர் 20) வருகின்றன.

தம்பி படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கி இருப்பதாக ‘எஸ்டிசி’ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதே நிறுவனம் திரிசாவின் கர்ஜனை படத்தின் உரிமையையும் வாங்கி கார்த்திகையிலேயே திரைக்கு கொண்டு வர ஆலோசிக்கிறது.

அமலாபாலின் அதோ அந்த பறவைபோல மார்கழி 11ல் (டிசம்பர் 27) வெளியாகிறது. சசிகுமாரின் நாடோடிகள்-2, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி உள்ள கேப்மாரி, பாரதிராஜா, வசந்த் ரவி நடித்துள்ள ராக்கி, அல்டி, வேழம், சைக்கோ, உன் காதல் இருந்தால், நான் அவளை சந்தித்தபோது, கருத்துக்களை பதிவு செய், பஞ்சாட்சரம், தேடு, இருளன், மதம், இ.பி.கோ 306, கொம்பு வச்ச சிங்கம்டா, அவனே சிறிமன் நாராயணா ஆகிய படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வருகின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,352.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.