Show all

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு

ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் மாணவர்களும், தமிழ் உணர்வாளர்களும் உலக நாடுகளில் புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களும் நடத்திய அறப்போரால் கடந்த வருடத்தில் முழுமையான நீதி வழங்காத ஒரு தீர்மானத்தை அமெரிக்கா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றியது. அதன்படி அமைக்கப்பட்ட மார்ட்டி அட்டிசாரி தலைமையிலான பன்னாட்டு விசாரணைக் குழுவினை இலங்கைக்கு உள்ளேயே சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. அதனால் அந்தக் குழுவின் அறிக்கையிலும் முழுமையான நீதி கிடைக்காது.

இந்த நிலையில் கொலைகாரனையே நீதிபதியாக்கும் அக்கிரமத்தை அமெரிக்க அரசு செய்ய முனைந்து, போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசே நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த மன்னிக்க முடியாத துரோகத்திற்கு இந்திய நரேந்திரமோடி அரசும் துணைபோகிறது.

இன்று தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களின் மனக்காயங்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடன் 2011 ஜூன் 8 ஆம் தேதி அன்று இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் அந்தத் தீர்மானத்தை முந்தைய காங்கிரஸ் அரசும், இன்றைய பாரதிய ஜனதா அரசும் குப்பையில் வீசிவிட்டு, சிங்கள அரசோடு பொருளாதார ஒப்பந்தங்கள் செய்தன.

2012 மார்ச் 23 ஆம் தேதி அன்று நான் விடுத்த அறிக்கையில், “தமிழக சட்டமன்றத்தில் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, ஈழத் தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும் ஈழத் தமிழர்களிடமும், பல நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களிடமும் ஐ.நா.மன்றம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தேன். மார்ச் 27 ஆம் தேதி அன்று அத்தகைய தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் நிறைவேற்றியதற்காக ‘வரலாறு பொன்மகுடம் சூட்டும்’ என்று வாழ்த்தினேன்.

இன்று முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் ஏழரைக் கோடி தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. அவருக்கு வரலாறு வாழ்த்துச் சொல்லும். மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு, தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, தமிழ் இனப்படுகொலைக்கு முறையான பன்னாட்டு விசாரணையை மனித உரிமை கவுன்சிலில் வலியுறுத்தாமல், அமெரிக்க-சிங்கள அரசுகளின் சதித்திட்டத்திற்கு உடந்தையாகச் செயல்படுமானால் நரேந்திர மோடி அரசை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.