Show all

போதை காட்டும் பாதை! குமரியில் பெருகும் தட்டுகெட்ட இளைஞர்கள்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்க் குடும்ப அமைப்புமுறை ஐயாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது. இன்றைக்கு நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டசமுக அமைப்பு தன் அங்கமாக கருத வேண்டிய குடும்பங்கள்மீது எந்தப் பொறுப்பும் இல்லாமல்,

அனைத்துக் குற்றப்பின்னனிகளுக்கும் பயிற்றுக் களமாக இருக்கிற சாராயக் கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்க் குடும்பங்களுக்கு தம்பிள்ளைகளை இற்றைச் சமுதாய அமைப்பில் இருந்து காப்பாற்றி சான்றோர்களாக வளர்த்தெடுப்பது கூடுதல் சுமையாக இருக்கிறது. சட்டசமுக அமைப்பை தமிழ்க் குடும்ப அமைப்பைப் போல பொறுப்புள்ளதாக கட்டமைக்க தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் முன்வர வேண்டும்.

குமரி மாவட்டத்தில் அடி,தடி வழக்குகளில் சிக்கி, விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் வேலை வாய்ப்புக்கான நன்னடத்தை சான்றிதழ் கிடைக்காமல் இளைஞர்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் அடி,தடி வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வழக்குகளில் இளைஞர்கள் அதிகம் பேர் குற்றவாளிகளாக உள்ளனர். 20 ல் இருந்து 30 அகவைக்குட்பட்ட பலர், இது போன்ற வழக்குகளில் சிக்கி தங்களது எதிர்காலத்தை இழந்து வருகிறார்கள். 

தங்களை திரைப்பட கதைத்தலைவர்களைப் போல அவர்களே சித்தரித்துக் கொண்டு  கூட்டம், கூட்டமாக நின்று அரட்டை அடிப்பது, ரகளை செய்வது, பெண்களைக் கிண்டல் செய்வது போன்ற செய்கைகளில் இறங்குகிறார்கள்.

இரவு நேரங்களில் சாலைகளில் கும்பல், கும்பலாக நின்று இடையூறு செய்வது, தட்டிக் கேட்பவர்களை ஆபாசமாக திட்டுவதுடன், அவர்களின் இல்லங்களுக்கு சென்று பொருட்களை சூறையாடுவது, வீட்டில் உள்ள இளம்பெண்களை மிரட்டுவது என இது போன்ற இளைய பட்டாளங்களின் செய்கைகள் அத்து மீறி வருகின்றன. காவல் நிலையங்களில் இது தொடர்பாக அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.  

படித்த, பட்டதாரி இளைஞர்கள் கூட தற்போது வன்முறை கலாச்சாரத்துக்குள் தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் மது அல்லது கஞ்சா போதைக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். மதுவை விட தற்போது கஞ்சா எளிதில் கிடைக்கும் பொருளாக மாறி உள்ளது. காவல்துறையும் அவ்வப்போது கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்வது, குண்டர் சட்ட கைது நடவடிக்கை மேற்கொள்வது என்று நடவடிக்கையில் இறங்கினாலும் கூட கஞ்சா விற்பனையை

முற்றிலும் தடுக்க முடிய வில்லை. போதை காரணமாகவே அதிகளவில் குற்ற செயல்கள் அரங்கேறத் தொடங்கி உள்ளன.

இது போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதன் விளைவாக, வேலை வாய்ப்புகளை இழந்த இளைஞர்கள் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது.  தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாடு வேலை போன்றவற்றுக்கு காவல்துறையின் நன்னடத்தை சான்றிதழ் அவசியமாகிறது. இவ்வாறு நன்னடத்தை சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும் இளைஞர்களில் 50 விழுக்காடு பேர்கள் வழக்குகளில் தொடர்பு உடையவர்களாக உள்ளனர். இதனால் அவர்களுக்கு காவல்துறையின் நன்னடத்தை சான்றிதழ் கிடைக்காமல் போய் விடுகிறது. இதனால் நல்ல வேலையை இழக்கும் நிலை ஏற்படுகிறது. 

போதையில் தன்னிலை மறந்து செய்த அடாவடி செயல்கள் அவர்களை குற்றவாளிகளாக்கி இப்போது, வேலை வாய்ப்பை பறி கொடுக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. இது போன்று அடி,தடி வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவற்றை முடிக்க வேண்டிய கட்டாயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே இப்போது காவல்துறையை நாடி, தங்களது வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர். பலர் தங்கள் மீதான வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது கூட தெரியாமல் இருந்து, இப்போது சிக்கலில் மாட்டி உள்ளனர்.

இது பற்றி காவல் துறையினர் கூறுகையில், சாதாரண அடி தடி வழக்குகள் நிலுவையில் இருந்தால் கூட, நன்னடத்தை சான்றிதழ் பெற முடியாது. காவல் துறையின் எச்சரிக்கையை மீறியும் இது போன்று வழக்குகளில் சிக்கி தற்போது இளைஞர்கள் பலர் தங்களது எதிர்காலத்தை இழந்துள்ளனர். பெரும்பாலும் படிக்கிற இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவர்களுக்கு முதற்கட்டமாக அறிவுரை கூறி தான் அனுப்புகிறோம். ஆனால் அதையும் மீறி அவர்கள் தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்குகிறார்கள் என்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,990.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.