Show all

திரை உலக பயணத்தில் இந்தியன்2 படம்தான் எனது கடைசி படம்! கமல்ஹாசன்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில், இருபதுக்கு இருபது கிழக்கம் பாலம் எனும் அமைப்பு சார்பில் கிழக்கம் பாலம் கிராமத்தில் ஏழை-எளியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 300 வீடுகளை வழங்கும்  விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு ஏழைகளிடம் வீடுகளை ஒப்படைத்தார். பிறகு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேரளா மாநிலம் எனக்கு வீடு போன்றது. இத்தகைய விழாக்களில் கலந்து கொள்ளும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இந்த அருமையான திட்டத்தை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த நான் விரும்புகிறேன்.

அதற்கு உரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். செயல்படுத்தும் அதிகாரம் இல்லாமல் கனவு கண்டால், அந்த கனவுகள் வெறும் கனவுகளாகவே இருந்து விடும். எனவே மாற்றம் வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழக மக்களுக்கு உண்மையான தேவைகள் தரப்படும். இதற்காகவே நான் மற்ற மாநில முதல்வர்களை சந்தித்து ஆலோசனை பெறுகிறேன். அவர்கள் ஆளும் மாநிலத்தில், அவர்கள் செய்துள்ள நல்ல திட்டங்களைக் கேட்டு அறிந்து வருகிறேன்.

கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்துப் பேசியுள்ளேன். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசி உள்ளேன். அவர்களிடம் இருந்து சில நல்ல யோசனைகளை பெற்றுள்ளேன். அவற்றை அப்படியே தமிழ்நாட்டிலும் செய்ய வேண்டும்.

 

தற்போது நான் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும். இந்தியன்-2 படத்துக்கு பிறகு திரைப்படத்தில் இருந்து விடைபெற்று விடுவேன்.

நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் தொடர்ந்து செயல்படும். எங்களது கட்சியை வழி நடத்த நிதி தேவைப்படுவதால் அதற்கு உதவும் வகையில் எனது திரைப்பட நிறுவனம் செயல்படும். மக்கள் நல திட்டங்களுக்கும் எனது திரைப்பட நிறுவனம் தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்.

இந்தியன்-2 படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.

எதிர்காலத்தில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். மதம், சாதி மற்றும் பணத்தை பயன்படுத்தி மாசு ஏற்படுத்த முயற்சி செய்யும் அரசியல் கட்சிகளை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பலரும் பணம் சம்பாதிக்கவே வருகிறார்கள். தற்போதைய அரசியல் கட்சித் தலைவர்களில் பலரும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர். ஆட்சி, அதிகாரம் என்பது மாநில மக்களுக்கு நல்லது செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை செய்பவர்கள் இல்லை. நாட்டில் நடத்த முடியாததையே அரசியல்வாதிகள் சொல்லி வருகிறார்கள். நடக்கும் காரியங்களை கூறி, அவற்றை அரசியல்வாதிகள் நிறைவேற்ற வேண்டும்.

அரசியலில் நிச்சயம் மாற்றம் வரும். எந்த ஒரு விசயத்தையும் செய்ய முடியுமோ, முடியாதோ என்று முதலில் எண்ணத் தோன்றும். ஆனால் நம்மால் அதை நிச்சயமாக செய்து முடிக்க முடியும்.

ஒரு கட்சியின் இலக்கு என்பது நிச்சயமாக அரசியலில் முதன்மைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பதுதான். தோல்வியை இலக்காக நினைக்க மாட்டார்கள். தீ என்றும் தீ தான். அதில் பெரிய தீ, சிறிய தீ என்று ஒன்றும் இல்லை.

அது பரந்து, பற்றத்தான் செய்யும். எதுவும் முதலில் சிறியதாக இருக்கும். முடிவில் அது பெரிதாக அமைந்து விடும். அந்த வகையில் மாநில மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் மதச்சார்பற்ற கட்சி ஆட்சி, அதிகாரத்துக்கு வர வேண்டும். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,990.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.