Show all

திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா 17,695 பாடல்கள் தனியாகப் பாடி ‘கின்னஸ்’ சாதனை

திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா இதுவரை 17,695 பாடல்கள் தனியாக பாடி சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவரது பெயர் ‘கின்னஸ்’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இனிய குரலில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதை அரை நூற்றாண்டுக்கும் மேலாக வசியப்படுத்தி இருப்பவர், பி.சுசீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் 40 ஆயிரம் பாடல்கள் பாடி இருக்கிறார்.

1953-ல் பிரகாஷ்ராவ் இயக்கத்தில், ‘பெற்றதாய்’ என்ற படத்தில் ‘எதுக்கு அழைத்தாய்’ என்ற பாடலைப் பாடி சினிமாவுக்கு அறிமுகமானார் பி.சுசீலா.

1955-ல் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் இவர் பாடிய ‘உன்னை கண்தேடுதே,’ ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்’ ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து பி.சுசீலாவை திரும்பிப் பார்க்க வைத்தன. இவருக்கு முன்பு பி.லீலாவும், எம்.எல்.வசந்தகுமாரியும்தான் முன்னணி பாடகிகளாக இருந்தனர்.

பி.சுசீலாவின் வசீகர குரல் ரசிகர்களின் இதயங்களை ஈர்த்தது. பாடும் வாய்ப்புகள் குவிந்தன. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா பாடிய டூயட் பாடல்கள் ரசிகர்களைக் கட்டிப்போட்டன. இருவரும் இணைந்து 700-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார்கள். 1969-ல் உயர்ந்த மனிதன் படத்தில் பி.சுசீலா பாடிய

‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

 

71-ல் சவாலே சமாளி படத்தில் இவர் பாடிய ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’ என்ற பாடலுக்கும் தேசிய விருது பெற்றார். ‘ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன், நினைக்க தெரிந்த மனமே, நீ இல்லாத உலகத்திலே, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், பார்த்த ஞாபகம் இல்லையோ, மறைந்திருந்து பார்க்கும், அமைதியான நதியினிலே ஓடம், அத்தைமடி மெத்தையடி, மன்னவனே அழலாமா, பாலிருக்கும் பழமிருக்கும், ஆடாமல் ஆடுகிறேன், அம்மம்மா காற்று வந்து ஆடைதொட்டு, அமுதை பொழியும் நிலவே, செந்தூர் முருகன் கோவிலிலே உள்பட ஏராளமான பாடல்கள் பி.சுசீலாவின் இனிமையான குரலில் இன்றுவரை ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.

     உலக அளவில் தனியாக 17 ஆயிரத்து 695 பாடல்கள் பாடிய ஒரே பாடகி பி.சுசீலாதான். இதற்காக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது தொடர்பாக பி.சுசீலா சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

“கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த இடத்துக்கு வருவதற்கு எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்பதை எண்ணிப்பார்க்கிறேன். இது சாதாரண சாதனை கிடையாது. எல்லோருக்கும் கிடைக்காது. 1953-ல் இருந்து பாடி வருகிறேன். படிப்படியாகத்தான் நான் முன்னேறினேன்.

 

எனக்கு முதன் முதலாக தமிழ் கற்றுக்கொடுத்து பாடுவதற்கு வாய்ப்பு அளித்தவர் ஏவி.மெய்யப்ப செட்டியார் தான். ஏவி.எம். நிறுவனம் மூலம் எனக்கு நல்ல பெயரும், புகழும் கிடைத்தது. இசைக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். அதற்கு உலக அங்கீகாரம் கிடைத்ததில் பெருமை அடைகிறேன்.

 

‘மீரா’ என்ற படத்தில் என்னை நடிப்பதற்காக அழைத்தார்கள். நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். எனக்கு பாடுவதுதான் தொழில். வாய்ப்பு கிடைத்தால் இப்போதும் பாடுவேன்.

இவ்வாறு பி.சுசீலா கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.