Show all

ஆதார் எண்ணைக் கட்டாயம் ஆக்கியுள்ள மோடி அரசு; பயனளிக்காத எதிர்ப்புகள்

அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் தெரிவிப்பதை நடுவண் அரசு கட்டாயமாக்கி இருப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை வியாழக்கிழமை அடுத்தடுத்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தலைமையில் காலை கூடியதும் அவை நடவடிக்கையை ஒத்திவைத்து விட்டு, ஆதார் எண் பயன்பாடு தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதிக் கட்சி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்டஎதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அறிக்கை அளித்தனர். ஆனால், அந்த அறிக்கையை அவைத் துணைத் தலைவர் நிராகரித்து விட்டார். ஆதார் எண்ணைத் தெரிவிக்காதவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம், ரேஷன் பொருள்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை நிறுத்திவிடுமாறு மாநில அரசுகளுக்கு நடுவண் அரசு உத்தரவிட்டுள்ளது என்று சமாஜவாதிக் கட்சி உறுப்பினர்கள் ராம் கோபால் யாதவ், நரேஷ் அகர்வால் ஆகியோர் கூறினர். அதைத் தொடர்ந்து, கூட்டாட்சி ஒத்துழைப்பைப் பற்றி பேசி வரும் பாஜக தலைமையிலான நடுவண் அரசு, மாநில அரசுகளின் ஒப்புதலின்றி முடிவுகளை எடுக்கிறது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரக் ஓபிரையன் கூறினார். ஆதார் எண் பயன்பாட்டைக் கட்டாயமாக்கும் நடுவண் அரசின் உத்தரவால், ஏழைகள்தான் பாதிக்கப்படுவர் என்று பிஜு தனதா தளம் கட்சி உறுப்பினர் திலீப் திர்கே கூறினார். அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், நடுவண் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது: அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல. தேவைப்பட்டால், இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். அரசு வழங்கும் மானியம் நேரடியாக மக்களைச் சென்றடைவதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நேரடி மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. முறைகேடுகளைத் தடுக்கவும், இடைத்தரகர்களை ஒழிக்கவும் நேரடி மானியத் திட்டம், காலத்தின் கட்டாயமாகும். அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்படும் வரை, ஆதார் எண் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படாது. இதுதொடர்பாக விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என்றார் அவர். அப்போது பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு ஆதார் எண்ணைத் தெரிவிக்காதவர்கள், அடுத்த மூன்று மாதங்களில் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது; அதன் பிறகு தனியாக மானியம் வழங்கப்படும். ஆனால், மானியம் ரத்து செய்யப்படாது என்றார். அமைச்சர்களின் விளக்கத்திலும் ஆதார் எண் கட்டாயம் என்கிற தகவல் வெளிப்படுவதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையின் மையப்பகுதிக்குச் சென்று முழக்கமிட்டனர். அவர்களை இருக்கையில் அமருமாறு அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் சமாதானப்படுத்த முயன்றார். எனினும், உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையை நண்பகல் வரை குரியன் ஒத்திவைத்தார். அதன் பிறகு, மாநிலங்களவை அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் மீண்டும் கூடியதும், ஆதார் எண் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பிர்கள் பிரச்னை செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கெனவே விளக்கம் அளித்த பிறகும் மீண்டும் பிரச்னை எழுப்புவது முறையல்ல என்று அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். தொடர்ந்து ஏற்பட்ட அமளியால், அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, பிரதமர் நரேந்திர மோடி அவையில் இருந்தார். பிறகு அவை மீண்டும் கூடியதும், மையப்பகுதியில் திரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கியதால், அவையை மதியம் 2 மணி வரை ஹமீது அன்சாரி ஒத்தி வைத்தார். மக்களவையிலும் ஆதார் எண் விவகாரம் எழுப்பப்பட்டது. இந்த விவகாரத்தை திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி தலைமையில் அக்கட்சியினர் எழுப்பினர். மேற்கு வங்க மாநிலத்தில் ஆதார் எண் இல்லாததால், சுமார் ஒரு கோடி பேர் அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெற முடியவில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.