Show all

எம்ஜியார் அவர்களின் கனவுப்படம் தற்போது மணிரத்னம் கையில்! பொன்னியின் செல்வன்

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எம்ஜிஆர் என்ற மாமனிதருக்கு முன்னும் பின்னும் திரையுலகில் வெற்றிக்கோட்டை தொட்டவர்கள் உண்டு. ஆனால் எம்ஜிஆர் அளவுக்கு உச்சத்தை தொட்டவர்கள் அரிதினும் அரிது. அந்த அரிதானவர்களிலும் எம்ஜிஆர் தனித்து நிற்பவர். காரணம் இயக்கம், ஒளிப்பதிவு, சண்டை, நடனம், படத்தொகுப்பு, என திரையுலகின் அத்தனை  துறைகளிலும்; அவருக்கு இருந்த அறிவாற்றல். 

அவரது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் அவர் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னனும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்கள் அந்த திறமைக்கு கட்டியம் கூறுபவை. குறிப்பாக நாடோடி மன்னன் திரைப்படம் அவரது வாழ்வில் குறிப்பிடத்தக்க படம். இந்தப் படத்திற்காக அதுவரை தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் அவர் அடகுவைக்கவேண்டியதானது. இந்த இரு படங்களின் தயாரிப்பை விட அவற்றை வெளியிடுவதில் அவர் சந்தித்த சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு நாவலுக்குரிய பகீர் திருப்பங்கள் கொண்டவை. நாடோடி மன்னன் இறுதிகட்டப்படப்பிடிப்பின்போது ஒருசமயம்,  'படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி' என்று நெருங்கிய நண்பர்களிடம் சோகம் இழையோடச் சொல்லியிருக்கிறார். உழைப்பின் பலனாக, நாடோடி மன்னன் அமோக வெற்றிபெற்றது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவரை திரையுலகின் மன்னனாக்கியது. வரலாற்றுப் படங்கள் என்றால் எம்ஜிஆரைவிட்டால் அதில் சோபிக்க வேறு ஆள் கிடையாது என அடித்துச்சொல்லும் அளவு அந்த வேடங்களில் அசத்திய எம்ஜிஆரை நாடோடி மன்னன் வெற்றி புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதற்குப்பின் அப்படி ஒரு வெற்றியை அவரது வாழ்வில் பார்த்திருக்கமுடியாது. மொத்த தமிழகமும் கொண்டாடியது அந்தப் படத்தை. 

நாடோடி மன்னன் தந்த வெற்றி அவருக்கு தொடர்ந்து இம்மாதிரி படங்களை தரவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. அப்படி அவரது ஆசையில் உதித்த எண்ணம்தான் பொன்னியின் செல்வனை  திரைப்படமாக்கவேண்டும் என்பது. கல்கியின் ஆகச்சிறந்த புதினங்களில் ஒன்றான, 'பொன்னியின் செல்வன்' படிப்பாளிகளிடையே பெற்றிருந்த வரவேற்பு எம்ஜிஆரை பெரிதும் ஈர்த்தது. கல்கியின் உரைநடை வீச்சும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளும் அதன் வர்ணனைகளும் நிரம்பி காணப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல், எம்ஜிஆருக்கு பெரும் ஆசையை மனதில் வித்திட்டதில் ஆச்சரியமில்லை. 

இதற்கென கல்கியின் குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெறப்பட்டது. நாடோடி மன்னன் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற சில மாதங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்ஜிஆர். தனது வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு பொன்னியின் செல்வன் வெளிவரும் என செல்லும் இடங்களில் எல்லாம் பெருமிதமாக சொன்னார். பொன்னியின் செல்வன் படமானால் அது தனக்கு நாடோடி மன்னனுக்கு ஈடான நிரந்தர புகழை ஈட்டித்தரும் என்பதில் ஐயமின்றி இருந்த எம்ஜிஆர், நாடோடி மன்னன் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே, எம.ஜிஆர். பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பு, பொன்னியின் செல்வன் என்று தான் பொறுப்பாசிரியராக இருந்த நடிகன் குரல் மாத இதழில்  இதுபற்றிய தகவலை வெளியிட்டார். அறிவிப்பை தொடர்ந்து படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகள் தேர்வும் நடந்தது. சிறுசிறு கதாபாத்திரத்திற்கும் கூட தேர்ந்த நடிகர் நடிகைகளை தேர்வு செய்தார். வழக்கமான தனது படங்களில் பயன்படுத்துபவர்களை தவிர்த்து புதிய கலைஞர்களை இதில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டார். பொன்னியின் செல்வன் கதையில்  இருவேடங்களில் எம்.ஜி.ஆரே ஏற்று நடிக்க முடிவெடுத்தார். நாவலின் முதன்மைக் கதைத்தலைவி கதாபாத்திரத்திற்கு அவர் தேர்ந்தெடுத்தது தமது குடும்பநண்பரும் பழம்பெரும் இயக்குனருமான கே. சுப்ரமணியம் அவர்களின் மகள் பத்மா சுப்ரமணியத்தை. நடனக்கலைஞரான அவர் நடித்தால் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக பேசப்படும் என்பது எம்ஜிஆரின் எண்ணம். 

பகீரத முயற்சியில் இதற்கான அனுமதியை அவரது தந்தையிடம் இருந்து பெற்ற எம்ஜிஆரால் அவரது மகளிடம் திட்டம் பலிக்கவில்லை. திரைப்படத்தில் நடிப்பதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் எம்ஜிஆரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதேசமயம் நாடோடிமன்னன் வெற்றியினால் தொடர்ந்து படங்களில் வாய்ப்பு கிடைத்து இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்ததால் எம்ஜிஆரின் கவனமும் பொன்னியின் செல்வனிலிருந்து விலகியது. என்றாலும் தனது மனதில் கதாபாத்திரங்ளையும் காட்சியமைப்புகளையும் செதுக்கியவாறு இருந்தார். மற்ற படங்களின் வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது பொன்னியின் செல்வனுக்கும் உரிய இடங்களைப் பார்த்து குறித்துக்கொண்டார். இருப்பினும் அது காகித வடிவிலேயே இருந்தது. 

படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கின்றன. அதை வண்ணத்தில் எடுக்கப் போகிறேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதும்படி கேட்கப் போகிறேன்! எனகூறியிருந்தார். அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தயாரிப்புக்கு குறிப்பிட்ட சில ஆண்டுகளாவது தேவைப்படும் என்ற நிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துவந்த எம்ஜிஆரால் படத் தயாரிப்பில் ஈடுபடமுடியவில்லை. 

பொன்னியின் செல்வன் கதையில் ஏராளமான கதாபாத்திரங்களும், சம்பவங்களும் உள்ளன. எனவே, படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய  படங்களை எடுத்து முடித்த பின்னரும், பொன்னியின் செல்வன் படத்துக்கான தொடக்கக் கட்ட பணிகள் கூட தொடங்கப்படவில்லை. 

முதன்மை கதாபாத்திரத்திற்கு தான் தேர்வு செய்த பத்மா சுப்ரமணியம்தான் நடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த எம்ஜிஆர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பத்மா இருந்த ஒரு மேடையில், 'பத்மா சம்மதித்து நடித்து கொடுத்தால் ஒரு மாதத்தில் படத்தை வெளியிடுவேன்' என்றும் கூறிப்பார்த்தார். ஆனாலும் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்த பத்மா சுப்ரமணியம் அதற்கு மசியவில்லை. இப்படி பல காரணங்களால் எம்ஜிஆர் பொன்னியின் செல்வனை கைவிட வேண்யடிதானதாக திரையுலகில் சொல்வர். 

ஆனாலும் எம்ஜிஆரின் மனதில் இருந்து பொன்னியின் செல்வனை விலக்க முடியவில்லை. பொது இடங்களில் தான் சந்திக்கும் திறமையான கலைஞர்களிடம் என் படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கறியா என தொடர்ந்து கேட்டபடி இருந்தார். 

நடிகர் சிவகுமாரின் 100-வது படவிழாவில் பேசிய எம்ஜிஆர் பொன்னியின் செல்வனை படமாக எடுக்க நான் முயற்சித்தபோது, சோழ இளவரசனாக சிவகுமாரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன் என்று பேசினார். இப்படி வந்தியத்தேவன், எம்ஜிஆரை விரட்டிக்கொண்டே இருந்தான். ஆனால், காலம் கைகூடவில்லை! முதல்வரான பின்னும் பொன்னியின் செல்வனை அவர் மனதில் இருந்து கழற்றி எறிந்திட முடியவில்லை.

அரசியலில் பரபரப்பாகி முதல்வாரன பின்னரும் அவ்வப்போது தனக்கு நெருங்கிய ஒரு இதழியலாளரிடம் இது குறித்த ஆதங்கத்தை எம்ஜிஆர் வெளிப்படுத்தியிருக்கிறார். கமல்ஹாசனை வைத்து தொடங்கும் திட்டமும் அவர் மனதில் இருந்தது. ஆனால் காலம் அவருக்கு அந்தக் கனவை நனவாக்கும் வாய்ப்பை இறுதிவரை வழங்கவேயில்லை. இதனிடையே குறிப்பிட்ட ஆண்டுகளில் பொன்னியின் செல்வன் மீதான எம்ஜிஆருக்கான உரிமை சட்டப்படி கைவிட்டுப்போன நிலையில் கமலஹாசனும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதுவும் ஈடேறவில்லை.

இப்படி அரசியலிலிலும் திரையுலகிலும் தான் நினைத்ததை முடிப்பதில் வல்லவரான எம்ஜிஆருக்கு 'பொன்னியின் செல்வன்' நாவல் அவரது நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாக  நிலைத்து நின்றுவிட்டது.

தமிழ்த் திரைப்படத்தை உலகம் முழுவதும் எடுத்து சென்றதில் முதன்மைப் பங்கு மணிரத்னத்துக்கு உண்டு. இவர் அண்மையில் எடுத்த செக்க சிவந்த வானம் படம் வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்தப் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம், எம்ஜியார் அவர்களின் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகிறார்.

இதில் தொடக்கத்தில் விஜய், விக்ரம், சிம்பு என பலரை நடிக்க வைக்க முயற்சித்தார். ஆனால் கைகூடவில்லை. தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் படம் தொடங்குவதற்கே சில மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,996.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.