Show all

‘கெத்து’ திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

உதயநிதி நடித்துள்ள ‘கெத்து’ திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

 இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ சார்பில் அதன் மேலாளர் எஸ்.சரவணமுத்து மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எங்களது நிறுவனம் சார்பில், ஜனவரி 14-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடித்த, ‘கெத்து’ திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கக் கோரி விண்ணப்பித்தோம்.

 ஆனால், ‘கெத்து’ என்பது தமிழ்ச்சொல் இல்லை எனக் கூறி கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்துள்ளனர். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து, ‘கெத்து’ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

 இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

 இதையடுத்து நீதிபதி எம்.துரைசாமி வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

‘கெத்து’ என்ற சொல் தமிழ் அகராதியில் இடம்பெற்றுள்ளது. எனவே, தமிழக அரசு கடந்த ஜனவரி 14-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், ‘கெத்து’ திரைப்படத்துக்கு படம் வெளியான நாள் முதல் கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.