Show all

ஒரே இரவில் எனது புகழைச் சீர்குலைக்க நினைப்பது வருத்தமளிக்கிறது: கருணாஸ்.

என் பெயரில் டுவிட்டரில் போலி கணக்கைத் தொடங்கி அஜித்குமாரை விஷமிகள் விமர்சித்து இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் மனு அளித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் நடிகர் கருணாஸ் பெயரிலான டுவிட்டர் கணக்கில், நடிகர் அஜித்குமாரை வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளுக்கு அழைக்கமாட்டோம் என்று கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தது. இது அஜித் ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர்கள் மத்தியில் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.  

இதற்கிடையே இதுதொடர்பாக புகார் அளிக்க சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகர் கருணாஸ் நேற்று வந்தார். கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை அவர் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எனது பெயரில் போலியான டுவிட்டர் கணக்கை யாரோ விஷமிகள் தொடங்கி, அஜித்குமாரை பற்றி விமர்சித்திருக்கிறார்கள். எனக்கும், இதற்கும் எந்தவித சம்பந்தம் இல்லை. டைரக்டர் வெங்கட்பிரபு ஆலோசனைப்படி கடந்த ஜனவரி மாதம் நான் டுவிட்டர் கணக்கில் சேர்ந்தேன்.

ஆனால், அதில் நான் எந்த கருத்தையும் வெளியிட்டதில்லை. ஆனால் யாரோ விஷமிகள் என் பெயரில் போலி கணக்கை தொடங்கி, தவறாக பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாரிடம் மனு கொடுத்துள்ளேன்.

நானும், அஜித்குமாரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். என்னைப்பற்றி நடிகர் அஜித்குமாருக்கு நன்றாகத் தெரியும். அவர் 200 சதவீதம் இதை நம்பமாட்டார். நான் மெரினா கடற்கரையில் தூங்கி இரவு பகலாக உழைத்து கஷ்டப்பட்டுதான் இந்த நிலைமைக்கு உயர்ந்துள்ளேன். ஆனால் ஒரே இரவில் எனது புகழை சீர்குலைக்க நினைப்பது வருத்தமளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.