Show all

தமிழகம் முழுக்க புலி படம் வெளியாகியுள்ளது.

வருமான வரிச் சோதனையின் எதிரொலியாக இன்று வெளியாகவிருந்த புலி படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அதன் சிறப்புக் காட்சிகள் ரத்தாகின. இந்நிலையில் அனைத்து சிக்கல்களும் தீர்ந்து 12 மணி காட்சி முதல் தமிழகம் முழுக்க புலி படம் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, புலி படத்தின் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். புகார்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் ஆகிய ஊர்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இதனால் திட்டமிட்டப்படி புலி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கான பணிகளை முறையாகச் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. க்யூப் தொழில்நுட்பத்துக்கான தொகை செலுத்தினால் மட்டுமே படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியும் என்கிற நிலையில் புலி படக்குழுவினரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால், அவர்களின் வங்கி கணக்கைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் க்யூப் தொழில்நுட்பத்துக்குப் பணம் செலுத்தினால் மட்டுமே படம் வெளியாகும் என்பதால் குறித்த நேரத்தில் புலி படத்தை வெளியிடமுடியாமல் போனது. முதல் பாதிப்பாக, வெளிநாடுகளில் புலி படத்தின் நேற்றிரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அடுத்ததாக, தமிழ்நாட்டில் இன்றைய சிறப்புக் காட்சிகள் (காலை 5 மணி) ரத்து செய்யப்பட்டன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இந்நிலையில் எல்லாச் சிக்கல்களும் தீர்ந்து, இன்றைய மதியம் 12 மணிக் காட்சி முதல் தமிழகம் முழுக்க புலி படம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தார்கள். திரையரங்கின் வாசல்களில் பட்டாசு கொளுத்தி தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

தமிழில் வெளியானது போல தெலுங்கு, இந்தி மற்றும் உலகம் முழுவதும் புலி படம் வெளியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.