Show all

இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்: நடுவணரசு நிரகரிப்பு.

உலகின் பல நாடுகளில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாடான இந்தியாவிலும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மரண தண்டனைக்கு எதிராக தொடர்ந்து கூக்குரலிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மரண தண்டனை முறையை அப்புறப்படுத்த வேண்டும் என்ற மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனையை ஒழிப்பது பற்றிய பிரச்சனையை ஆய்வு செய்யுமாறு சட்ட ஆணையத்தைக் கேட்டுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து 9 பேர் கொண்ட சட்ட ஆணையக் குழு அமைக்கப்பட்டது. தீவிரவாதச் செயல்களைத் தவிர இதர வழக்குகளில் மரண தண்டனையைக் கைவிடலாம் என்று பெரும்பான்மை அடிப்படையில் சிபாரிசு செய்தது.

குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேர், மரண தண்டனை நீடிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனாலும், பெரும்பான்மை உறுப்பினர்கள், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றே கூறியிருந்தனர். இந்த சிபாரிசு அறிக்கை, நடுவண் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் நகல், உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சட்ட ஆணையத்தின் சிபாரிசு அறிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான ஆலோசனை நடத்தியது. நடுவண் உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி மற்றும் உயர் அதிகாரிகள் அதில் பங்கேற்றனர். அதில், சட்ட ஆணையத்தின் சிபாரிசை நிராகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.