Show all

டெல்லியில் மோடி,ரணில் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

இந்தியா இலங்கை இடையே 4 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. டெல்லியில் மோடி,ரணில் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது  இரு நாட்டு மீனவர் பிரச்னை தீர முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.

டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், இலங்கை பிரதமர் ரணிலும்  இன்று சந்தித்து பேசினர். அப்போது இந்தியா இலங்கை இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில்  இலங்கையில் இந்தியாவுடன் இணைந்து அவசர கால ஆம்புலன்ஸ் சேவை, சார்க் செயற்கோள் திட்டத்தில் கூட்டுறவு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் அதில்  இடம் பெற்றன. மேலும் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா வந்துள்ள ரணிலுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்  கொள்கிறேன். இந்தியா இலங்கை இடையிலான உறவில் இது ஒரு மைல் கல்லாக அமையும். இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா முழுமையாக ஒத்துழைப்பு  அளிக்கும். இந்தியா மீதான இலங்கையின் நம்பிக்கைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் சிங்களர்களும், தமிழர்களும்  சுதந்திரத்துடனும், சமத்துவத்துடனும் வாழ வழி வகை செய்யப்பட வேண்டும். இரு நாட்டு ஒப்பந்தங்களும் உடனடியாக அமலுக்கு வருவதற்கு தேவையான  முன்னுரிமை அளிக்கப்படும். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு மேம்பட ஒத்துழைப்பு அளிக்கப்படும்.  மீனவர் பிரச்னை தீர முக்கியத்துவம்  அளிக்கப்படும் என்றார்.

பின்னர் ரணில்  பேசுகையில், இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் அதிகாரத்திற்காக போட்டியிட்ட இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.  தமிழர் கட்சி எதிர்கட்சியாக உள்ளது. இந்தியாவுடன் பல ஆண்டுகளாக இலங்கைக்கு நல்ல உறவு உள்ளது. இந்தியாவுடன் பாதுகாப்பு, தீவிரவாதம் உள்ளிட்ட  விவகாரங்கள் குறித்து பேசப்பட்டன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு விவகாரம் குறித்தும் பேசப்பட்டது. மேலும் சுற்றுலாத்துறையை  மேம்படுத்துவது தொடர்பாகவும் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்று ரணில் குறிப்பிட்டார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.