Show all

இளையராசாவிற்கு கேரளஅரசு விருது! அவரையும் அறியாமல், ஹிந்தித் திரைப்பாடல்களைத் தமிழகத்திலிருந்து ஓடஓட விரட்டியவர்

அறிந்தும் அறியாமலும், தமிழகத்தின் தெருவெங்கும் ஹிந்திப்பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த அவலத்தை, வேரும் வேரடி மண்ணுமாக களைந்த, தமிழ்பட இசைக்கான வரலாற்றுத் தலைவன் இளையராசா அவர்கள். அவருக்கு கேரளஅரசு விருது அறிவித்துள்ளது.

11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தின் தெருவெங்கும் ஹிந்திப்பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த அவலத்தை வேரும் வேரடி மண்ணுமாக களைந்த, தமிழ்பட இசைக்கான வரலாற்றுத் தலைவன் இளையராசா அவர்கள். 

இளையராசா, இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் 43 ஆண்டுகளுக்கு முன்பு அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது.

இளையராசாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருது, கடந்த ஆண்டு இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

இவ்வாறான நிலையில் இசையமைப்பாளர் இளையராசாவுக்கு அரிவராசனம் விருது வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை தேவசம் வாரியமும், கேரள மாநில அரசும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு அரிவராசனம் விருது வழங்கி வருகிறது. சபரிமலையின் புகழைப் பரப்பும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதினை இதற்கு முன்னதாக, கே.ஜே.யேசுதாஸ், கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, பி.சுசீலா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராசாவுக்கு வரும் பொங்கல் திருநாளில் அரிவராசனம் விருது வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் தொகையும், ‘தெய்வீக இசை மேதை’ என்ற பட்டமும் வழங்கப்படுகிறது. மத நல்லிணக்கம், இந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராசாவிற்கு விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,378.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.