Show all

சென்னையில் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வெற்றி: கோஹ்லி சதம்

சென்னையில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் முடிவில் தென் ஆப்ரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 

இதில், கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் களமிறங்கிய இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. ரோகித் ஷர்மா (21), தவான் (7)  ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதன் பின்னர் கைகோர்த்த விராட் கோலியும், ரஹானேவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 19-வது ஓவரில் இந்தியா 100 ரன்களை தொட்டது. ரஹானே 45 ரன்களில் (53 பந்து, 4 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். இதையடுத்து சுரேஷ் ரெய்னா, கோலியுடன் ஜோடி சேர்ந்தார்.

கோஹ்லி ஒருநாள் அரங்கில் தனது 23வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில், ரெய்னா அரைசதம் அடித்து கலக்கினார். இவர், 53 ரன்னில் (52 பந்து) ஆட்டமிழந்தார். கோஹ்லி 140 பந்தில் 138 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் வெளியேறினார். கடைசி 10 ஓவரில் நமது அணி 69 ரன் மட்டுமே எடுத்தது. டோனி 16 பந்தில் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 50 ஓவரில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்க தரப்பில் ஸ்டெயின், ரபாடா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 


 300 ரன் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, இந்தியாவின் அபார பந்துவீச்சில் தடுமாறியது. அம்லா (7), டுபிளெஸ்சிஸ் (17), மில்லர் (6) சொற்ப ரன்னில் வெளியேறினர். டிகாக் (43) ஓரளவுக்கு கைகொடுத்தார். 

டிவில்லியர்ஸ் அட்டகாசமாக சதம் அடித்தார். 107 பந்தில் 112 ரன் எடுத்த டிவில்லியர்ஸ், புவனேஸ்வர் வேகத்தில் வெளியேற தென் ஆப்ரிக்காவின் நம்பிக்கையும் குலைந்தது. அடுத்து வந்தவர்கள் பந்துவீச்சாளர்களே என்பதால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியில் தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து தோற்றது. பந்துவீச்சில் புவனேஸ்வர் 3, ஹர்பஜன் 2, மோகித் ஷர்மா, அக்சர் பட்டேல், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சதம் அடித்த கோஹ்லி ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் மூலம் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆகி உள்ளது.

உலக கோப்பையின் முதல் லீக் போட்டியில் (பிப்.15) பாகிஸ்தானுக்கு எதிராக கோஹ்லி 107 ரன் எடுத்தார். அதன் பின், 14 போட்டிக்கு பிறகு தற்போதுதான் கோஹ்லி  சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.