Show all

குடிமகனின் குரல் நாடாளுமன்றத்தில் கூட ஒலிக்கும்! சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட இருக்கிறேன்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி

17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். 

பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள வீட்டில் வைத்து பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது, குறித்து பெங்களூருவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசும்பொழுது, கவுரி லங்கேஷ் கொலையை மோடியின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாகவும், இதுபோன்ற விசயத்தில் மவுனமாக இருக்கும் மோடி என்னை விட சிறந்த நடிகர் என்று கூறினார்.

இதற்காக தனக்கு வழங்கப்பட்ட 5 தேசிய விருதுகளை திருப்பித்தரவும் தயங்க மாட்டேன் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.

தொடர்ந்து தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக அவர் விமர்சனங்களை வைத்து வந்துள்ளார்.  இதனால் அவருக்கு எதிராக அறங்கூற்றுமன்றத்தில் அவதூறு வழக்கு கூட தொடரப்பட்டது.

அதன்பின் நான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன் என மைசூரு நகரில் நடந்த இதழியலாளர்கள் சந்திப்பொன்றில் கூறினார்.

இந்த நிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளேன் என்று அவர் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள கீச்சு செய்தியில்: ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.  ஒரு புதிய தொடக்கம்.  அதிக பொறுப்புணர்வு.  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உங்களது ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட இருக்கிறேன்.  தொகுதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். குடிமகனின் குரல் நாடாளுமன்றத்தில் கூட ஒலிக்கும் என தெரிவித்து உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,019.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.