Show all

ஆஸ்கர் விருது போட்டிக்கு, கோர்ட் என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, கோர்ட் என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காக்கா முட்டை படத்துக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் பங்கேற்கும் போட்டிக்கு,

காக்கா முட்டை, பாகுபலி, பிகே, மசான், மேரி கோம், ஹைதர் உள்பட 30 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

அவற்றில், புதுமுக இயக்குநர் சைதன்யாதமானே இயக்கியுள்ள கோர்ட் என்ற மராத்தி மொழித் திரைப்படத்தை, பிரபல இயக்குநர் அமோல் பாலேகர் தலைமையிலான நடுவர் குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

வயதான நாட்டுப்புற பாடகர் ஒருவர், கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி துப்புரவுத் தொழிலாளி உயிரிழக்கும் அவலத்தை விவரித்தும், இந்திய அரசியல் சட்டத்தை விமர்சித்தும் பாடல் இயற்றுகிறார். இதனால் அவர் வழக்கை சந்திக்க நேரிடுகிறது. வழக்கை அவர் எதிர்கொள்ளும் விதத்தை மையமாக வைத்து கோர்ட் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

காக்கா முட்டை

இந்த வருட ஆஸ்கர் விருது போட்டிக்கு, காக்கா முட்டை, குற்றம் கடிதல் போன்ற படங்களும் போட்டியிட்டன. இதில் காக்கா முட்டை நிச்சயம் தேர்வாகும் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். வட இந்தியாவிலும் இந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஸ்லம்டாக் மில்லியனர் போல காக்கா முட்டை படமும் ஏழைகளின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ளதால் நிச்சயம் ஆஸ்கருக்குத் தேர்வாகும் என்று பலரும் விரும்பினார்கள். காக்கா முட்டை ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டால் நிச்சயம் ஆச்சர்யமான முடிவுகள் கிடைக்கவும் வாய்ப்புண்டு என்றும் கருதப்பட்டது.

ஆனால் கோர்ட் படம் காக்கா முட்டையை விடவும் கூடுதல் பலத்துடன் இருந்ததுதான் காக்கா முட்டை வாய்ப்பை இழக்க காரணமாகிவிட்டது.

சென்ற வருடத்தின் சிறந்த படம் என்கிற தேசிய விருது 3.5 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட கோர்ட் படத்துக்குக் கிடைத்தது. மேலும் இதுவரை 17 சர்வதேசத் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளது. கடந்த வருடம் வெனீஸ் திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டது. அதில் ர்ழசணைழளெ உயவநபழசல விருது இப்படத்துக்குக் கிடைத்தது. டுழைn ழுக வுhந குரவரசந விருது இயக்குநர் சைதன்யாவுக்குக் கிடைத்தது.

விமரிசகர்கள் பலரும் இந்தியாவின் ஆஸ்கர் தேர்வுக்கு கோர்ட் படமே தேர்வாகவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்கள். வெளிநாட்டு இதழ்களிலும் இப்படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தன. பலமான விருதுகள், விமரிசகர்களின் பரிந்துரை, நடுவர் குழுவின் அமோக ஆதரவு போன்ற காரணங்களினால் கோர்ட் படம் ஒருமனதாகத் தேர்வாகியுள்ளது.

இத்தனைச் சாதக பலன்களும் காக்கா முட்டைக்கு இல்லை. தேசிய அளவில் சிறந்த குழந்தைகள் படம் என்கிற விருதைப் பெற்றது. நிறைய பாராட்டுகளை வட இந்தியாவிலும் பெற்றது. சர்வதேசப் படவிழாவிலும் கலந்துகொண்டது. ஆனால் கோர்ட்டுக்குக் கிடைத்த ஏராளமான விருதுகளும் பாராட்டுகளுடனும் ஒப்பிடும்போது காக்கா முட்டை பின்தங்கவேண்டியதாகப் போய்விட்டது. காக்கா முட்டையை கோர்ட் படத்தைத் தாண்டிக் கொண்டு செல்ல போதிய ஆதரவும் இல்லாமல் போய்விட்டது. ‘கடைசிச் சுற்றில் கோர்ட்டும் மம்முட்டி நடித்த மதேமரியும் (மலையாளம்) இருந்தன. பல காரணங்களை முன்வைத்து கோர்ட் தேர்வாகியுள்ளது’ என்று தேர்வுக்குழுவில் இடம்பெற்ற இயக்குநர் கே. மது பேட்டியளித்துள்ளார். (தேர்வுக்குழுவில் கேரளாவைச் சேர்ந்த மது, ஒளிப்பதிவாளர் ராமசந்திர பாபு, இயக்குநர் பிஜூ ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள்.)

அமோல் பாலேகர் தலைமையிலான நடுவர் குழுவில் 15 பேர் இருந்தார்கள். அதில் கடைசி ஓட்டுப் பதிவுக்கு முன்பு ராகுல் ரவைல் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். அவரும் கூட கோர்ட் தேர்வுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை, பாலேகருடனான கருத்துவேறுபாடு தொடர்பாகவே குழுவிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளார்.  

2013-ல் லஞ்ச் பாக்ஸ் படத்துக்குப் பதிலாக தி குட் ரோட் படம் தேர்வானபோது பலத்த சர்ச்சை ஏற்பட்டது. அதுபோன்ற சர்ச்சைகள் இந்தமுறை இல்லை. கோர்ட்டை விட சிறந்த படம், அதிக விருதுகள் வாங்கிய படம் என எந்தப் படத்தையும் முன்னிறுத்தமுடியாது. அதுவே கோர்ட் படத்தின் தேர்வை மேலும் உறுதிப்படுத்திவிட்டது.

ஆஸ்கர் விருதுக்கான டாப் 5 பட்டியலில் இதுவரை மதர் இந்தியா (1957), சலாம் பாம்பே (1988), லகான் (2001) போன்ற படங்களே இடம்பெற்றுள்ளன. கோர்ட் எந்தளவுக்கு முன்னே சென்று இந்தியத் திரையுலகின் பெருமையை வெளிப்படுத்தும் என்பது ஆஸ்கர் விருது அறிவிக்கப்படும் நாளன்று (2016, பிப்ரவரி 28) தெரிந்துவிடும்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.