Show all

சன் தொலைக்காட்சியின் மீது நடிகை திரிசா பாய்சல்!

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில் வெளியாகி பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 96 படம் வரும் தீபாவளி நாளன்று சன் தெலைக்காட்சியில் ஒளிபரப்பப் படுகிறது. இதனை எதிர்த்து படத்தின் கதைத்தலைவி திரிசா தனது கீச்சுப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

பிரேம் குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, திரிசா ஆகியோரின்  நடிப்பில் கடந்த மாதம் வெளியானது 96 திரைப்படம். காதலை மட்டுமே மையப்படுத்தி வெளியான இப்படம் அனைவரின் பெரும் வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படத்தை தொலைக்காட்சியில் தீபாவளி அன்று ஒளிபரப்புவதாக சன்தொலைக்காட்சிஅறிவித்துள்ளது. இது ரசிகர்கள் பலருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் இதற்கு படத்தின் கதைத்தலைவி திரிசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
 
கீச்சுவில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 96 திரைப்படம் ஐந்தாவது கிழமையில் அடி எடுத்து வைத்துள்ளது. இப்போதும் கூட திரையரங்குகளில் 80 விழுக்காடு இருக்கைகள் நிரம்புகின்றன. 
 
இந்தச் சூழ்நிலையில், சன் தொலைக்காட்சியில் 96 திரைப்படத்தை இவ்வளவு விரைவில் ஒளிபரப்பு செய்வது சரி இல்லை. திரைப்படத்தை பொங்கல் நாளில் வெளியிட வேண்டும் என்று சன் தொலைக்காட்சியை கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்தால் அது சிறப்பாக அமையும் என பதிவிட்டு தலைப்பாக்க முயற்சித்துள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,960.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.