Show all

நடிகை அசின் தொழிலதிபர் ராகுல்சர்மா திருமணத் தேதி வெளியாகியுள்ளது.

நடிகை அசின் திருமணம் நவம்பர் 26ந் தேதி டெல்லியில் நடக்கிறது. தொழிலதிபர் ராகுல்சர்மாவை மணக்கிறார். திருமணத்துக்குப் பின் சினிமாவைவிட்டு விலக முடிவு செய்துள்ளார்.

தமிழில், ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் அசின்.

‘போக்கிரி’, ‘வரலாறு’, ‘வேல்’, ‘கஜினி’, ‘சிவகாசி’, ‘தசவதாரம்’ உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

‘கஜினி’ படத்தை இந்தியில் மொழி மாற்றம் செய்தபோது அதிலும் அசினே கதாநாயகியாக நடித்தார்.

அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியதால் இந்திபட உலகிலும் காலூன்றினார்.

சல்மான்கான், அமீர்கான், அக்ஷய்குமார், அபிஷேக் பச்சன் உள்பட முன்னணி இந்திப்பட கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

திரைப்பட விழா ஒன்றில் அசின் பங்கேற்றபோது, ‘மைக்ரோ மேக்ஸ்’ செல்போன் நிறுவன அதிபர் ராகுல்சர்மாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகினார்கள். பிறகு அது காதலாக மலர்ந்தது.

அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்தனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தார்கள். இந்தத் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடந்தன.

திருமணத்துக்கான உடைகள், நகைகள் போன்றவற்றை வெளிநாட்டில் இருந்து அசின் வாங்கி வந்தார்.

திருமணம் எப்போது நடைபெறும் என்று திரையுலகில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் திருமண தேதி தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 26-ந் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அசின்-ராகுல் சர்மா திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்கிறார்கள்.

நவம்பர்  27ந் தேதி டெல்லியில் ‘வெஸ்ட் என்ட் கிரீன்ஸ்’ பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த பண்ணை வீட்டில் தான் பிரபல நடிகர் ஷாகித் கபூர்- மைரா ராஜ்பூத் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர்-நடிகைகளுக்காக நவம்பர் 28ந் தேதி அல்லது 29ந் தேதி மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், இந்தி நடிகர்-நடிகைகள், தமிழ், தெலுங்கு, மலையாள நடிகர்-நடிகைகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

திருமணத்துக்குப் பின் அசின் சினிமாவைவிட்டு விலக முடிவு செய்துள்ளார். இதற்காக புதுப்பட வாய்ப்புகளை இப்போதே தவிர்த்து வருகிறார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.