Show all

ஈராக்கில் குண்டு வெடிப்பு சம்பவங்களில், மொத்தம் 59 பேர் உயிரிழந்ததாக தகவல்.

ஈராக்கில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐஎஸ் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது.

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அரசுக்கு எதிராக போரிட்டு வரும் இவர்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், தலைநகர் பாக்தாத் உள்ளிட்ட இடங்களில் நேற்று தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.தியாலா மாகாணம், அல்-காலேஸ் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில், பொதுமக்களில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.     

இதேபோல், பஸ்ரா மாகாணத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அல்-சாதி பகுதியில் கார் குண்டு வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். சுமார் 25 பேருக்கு காயம் ஏற்பட்டது. தலைநகர் பாக்தாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவங்களில், மொத்தம் 59 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என தெரிகிறது. வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.