Show all

முதலாளி, கஸ்தூரியின் வலது கையை கொடூரமாக வெட்டியிருக்கிறார்.

சவூதி அரேபியாவில் முதலாளியால் வலது கை வெட்டப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து வெளிவுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எழுதியுள்ள கடிதத்தில்,

தன் முதலாளியால் சித்ரவதை செய்யப்பட்டு கொடிய முறையில் வலது கை வெட்டப்பட்ட நிலையில் கஸ்தூரி, ரியாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் பதற்றம் அடைந்திருக்கிறார்கள்.

கஸ்தூரியை அவசரமாக தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர உதவுமாறு என்னிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். கை வெட்டப்பட்ட கஸ்தூரிக்கு அங்கே முறையான சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்றும், அவரது நிலைமை விரைவாக மோசமடைந்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

எனவே நீங்கள் உடனடியாக இந்திய தூதரக அதிகாரிகளை அறிவுறுத்தி, எவ்வளவு விரைவாக கஸ்தூரியை இந்தியாவுக்கு அழைத்து வரமுடியுமோ, அவ்வளவு விரைவாக அழைத்து வர நடவடிக்கை எடுத்திடவேண்டும். இந்தக் கோரிக்கையை கஸ்தூரியின் குடும்பத்தினரின் சார்பாக உங்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கனிமொழி கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள மூங்கிலேறி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம். 55 வயதுடைய இவர் வீட்டு வேலை செய்யும் வேலைக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு சென்றார்.

இந்நிலையில், வெளிநாட்டு வேலையாட்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய, அந்நாட்டை சேர்ந்த அதிகாரிகள் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தன் முதலாளி தன்னை கொடுமைப்படுத்துவதாக அதிகாரிகளிடம் கஸ்தூரி முறையிட்டிருக்கிறார்.

இதனால், கோபமடைந்த, முதலாளி, கஸ்தூரியின் வலது கையை கொடூரமாக வெட்டியிருக்கிறார். இதனால் படுகாயம் அடைந்த கஸ்தூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.