Show all

நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் வெற்றி.

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி என்ற பெயரில் போட்டியிட்ட நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டவர்கள் இதுவரை இல்லாத அளவில் மதுரை, சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று நாடக நடிகர்களிடமும், திரைப்பட நடிகர்களிடமும் ஆதரவு கோரினர். உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரையும் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.

ரஜினிகாந்த் நேரடியாக ஆதரவைத் தெரிவிக்காத போதிலும், கமல்ஹாசன் பாண்டவர் அணிக்கு பகிரங்கமாக தன்னுடைய ஆதரவை தெரிவித்ததோடு தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசரின் வேட்பு மனுவையும் வெளிப்படையாக முன்மொழிந்து கையெழுத்திட்டார்.

இதனால் கமல்ஹாசன் மீது சரத்குமார், ராதிகா, ராதாரவி, டி.ராஜேந்தர் உள்ளிட்ட எதிரணியினர் விமர்சனத்தை முன்வைத்தனர். சரத்குமார் அணியைச் சேர்ந்த நடிகர் சிம்பு உள்ளிட்ட பலர் பாண்டவர் அணியைச் சேர்ந்தவர்களை ஒருமையில் பேசி விமர்சித்ததையும் திரையுலகினர் பலர் ரசிக்கவில்லை.

அதே போல திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சரத்குமார் அணிக்கு திடீரென ஆதரவு அளித்ததை தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலரே ஏற்கவில்லை.

இத்தனை பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் இடையே நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை ஆரம்பத்தில் சரத்குமார் அணிக்குச் சாதகமாகவே இருந்தது. இதற்கு நாடக நடிகர்கள் உள்ளிட்டோரின் தபால் வாக்குகள் அவர்கள் அணிக்குப் பெருவாரியாக ஆதரவளித்ததே காரணமாகக் கூறப்பட்டது.

ஆனால் அதற்குப் பிறகு இரவு 10 மணிக்கு மேல் நிலைமை மாறத் தொடங்கியது. முன்னிலையில் இருந்த சரத்குமார், ராதாரவி, எஸ்.எஸ்.ஆர். கண்ணன் ஆகியோரை முறையே நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றனர்.

இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞரான கமல்ஹாசனின் ஆதரவு, பாண்டவர் அணிக்கு விஸ்வரூப வெற்றியை அளித்துள்ளதாகவே நடிகர்கள் கருதுகின்றனர்.

வாக்குப் பதிவு மையத்துக்கு அருகில் நாசர் அணிக்கு ஆதரவாக, நடிகை சங்கீதா பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து எழுந்த கருத்து வேறுபாடுகளால் சரத்குமார் தரப்புக்கும், நாசர் தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தப் பிரச்னையின்போது,

விஷாலை சரத்குமார் தரப்பினர் தாக்கி விட்டதாக சர்ச்சை எழுந்தது.

இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து. மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

விஷால் அணியின் சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் இதேபோல் மற்றொரு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பொன்வண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.