Show all

தமிழ்ராக்கர்சை வெற்றது 2.0!

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கத்திய திரையுலகிற்கு சவால் விட்டிருக்கும் தமிழ் படம் 2.0 என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் இந்தியத் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் தொழில் நுட்பம், படம் பார்ப்பவர்களை மிரட்டுகிறது.

தமிழ்த்திரையுலகில் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குநர் சங்கர், அதித மின்மினி ரஜினிகாந்த், இவர்களுடன் பணம் கொட்டிக் கிடக்கும் லைகா கூட்டணி போட்டு மேற்கத்திய திரையை துணிச்சலாக மிரட்டியிருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் லைகா நிறுவனம் 600 கோடி ரூபாய் செலவுத் திட்டத்தில், இந்த படத்தை தயாரித்தனர். இந்தியாவிலேயே அதிக செலவுத்திட்டத்தில் எடுக்கப்பட்ட படம் 2.0 தான்!

அமெரிக்கா முதல் ஆப்கானிஸ்தான் வரை உலக நாடுகள் பலவற்றில் வெளியானதே ஒரு சாதனைதான். ஆஸ்கார் விருதாளரான ஏ.ஆர். ரஹ்மான் இசை, இன்னொரு ஆஸ்கார் விருதாளரான ரசூல் பூக்குட்டியின் கலைப்;பாடு, முத்துராஜின் ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பு என படத்திற்கு கணம் ஏற்றியிருக்கிறார்கள். படத்தின் நுட்ப பணிகள் மேற்கத்திய படப்பிடிப்பகங்களில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன என்பதே இந்தப் படத்திற்கான மெனக்கெடலை நமக்குச் சொல்லும்.

விசிறிகள் நடுவிலான எதிர்பார்ப்பைவிட ஒட்டு மொத்த இந்திய திரைப் பிரபலங்களே எதிர்பார்த்த படம் 2.0 என்று சொன்னால் மிகையாகாது. 600 கோடி செலவுத்திட்டத்தையும், அதைத் தாண்டிய எதிர்பார்ப்புகளையும் சுமந்திருக்கிற தோள்கள், இயக்குனர் சங்கர், அக்சயகுமார், அதித மின்மினி ரஜினி,ஆகிய மூவருடையன!

இந்தியத் திரையில் எவரும் தொடாத வணிக எல்லையைத் தாண்டி, செலவு செய்த லைகாவையே படத்தின் தேர்ச்சியால். சங்கரும், ரஜினியும், அக்சயகுமாரும் திகைக்க வைத்திருக்கிறார்கள் என்பது உண்மையே.

படத்தின் கதை: ஒரு மனிதனின் செயல்களையும் சக்திகளையும் பூமியில் இதுவரை மனித இனம் கண்டிராத ஒரு தீய சக்தி பயன்படுத்தினால் அது எவ்வகை இழப்புகளை ஏற்படுத்தும் என்பதை, இயங்கியல் நிலை பார்க்காமல் அவதார் பாணியில் சங்கர் கூறியிருக்கிறார். எந்திரன் முதல் பாகத்தில் சிட்டியை தவறான எந்திரமனிதனாக்கி, அதனாலேயே அழியும் வில்லனின் மகன், அதேபோல் அழிவு சத்தியை பயன்படுத்த நினைக்கிறார். அதை தடுக்க சிட்டியை உருவாக்கிய விஞ்ஞானி வசீகரனை நாடுகின்றனர். அவரும் சிட்டியை புதியதடத்தில் உருவாக்கி அழிவு சக்தியிலிருந்து மீட்டெடுக்கிறார்.

வசீகரனாக வரும் ரஜினி முதல் பாகத்தைப் போலவே இருக்கிறார். ஆனால் அக்சயகுமார் படம் முழுக்க வியாபித்து ஒட்டு மொத்த ஆணவத்தைக் காட்டி மிரட்டியுள்ளார். அதுவும் பறவை போலவும், வித்தியாசமான விலங்கைப் போலவும் மனிதனாகவும் வேறுபடுத்தி காட்டி வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு, அவர் இந்திய திரையின் தலைசிறந்த நடிகராக இனிவரும் தலைமுறையால் போற்றப்படுவார் என்பதை உணர்த்துகிறது.

இயக்குனர் சங்கர், 'பாகுபலி' ராஜமௌலிக்கு தான்தான் ஆசிரியர் என்பதை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி எப்போதும் புலியே என்பதாக இந்தியத் திரையில் அழுத்தமாக தடம் பதித்துள்ளார். கலை இயக்குனர் ரசூல் பூக்குட்டி உலகத் தரத்தை மிஞ்சும் அளவில் பங்காற்றியுள்ளனர்.

எமிஜாக்சன் ரஜினியுடன் நடித்த பிரபலங்கள் பட்டியலில் இருப்பார். படத்தின் இரு பெரும் மலைகளுக்கு முன் மற்றவர்கள் எடுபடவில்லை என்பது சிறு குறையானாலும் அது தெரியவில்லை.

மொத்தத்தில் படம் நல்லா வந்திருக்கு! 2.0 க்கான மிகப் பெரும் சிறப்பு என்னவென்றால், படம் வெளியான அன்றே தமிழ்ராக்கர்ஸ் இணைத்தில் 2.0 வை வெளியிட்ட போதும், இது பிரமாண்டம் மற்றும் முப்பரிமானப் படம் என்பதால், தமிழ்ராக்கர்ஸ் பதிப்;பை தரவிறக்கம் செய்ய ஆளில்லாமல் ஈயோட்டிக் கொண்டிருப்பதாகச் சொல்லப் படுகிறது. தமிழ்ராக்கர்சிடம் வெற்றி கொள்ளும் பாடத்;தை, இனி இப்படித்தான் திரையுலகம் கற்றாக வேண்டும்.

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,987.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.