Show all

மலைப்பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது விளம்பரம்

மலைப்பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது யாரெல்லாம் விளம்பரம் செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்களைத் திரட்ட வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், மலைப்பகுதியில் உள்ள பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீதும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்கள், சாலைகளுக்கு நடுவே உள்ள தடுப்புகள் ஆகியவற்றின் மீதும் அரசியல் கட்சிகள் விளம்பரங்கள் செய்கின்றன. இதற்குத் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வனப்பகுதியில் உள்ள பாறைகள், மரங்களில் எந்த ஒரு விளம்பரமும் செய்யப்படவில்லை என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வருவாய்த் துறையினர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழக வருவாய்த் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. மேலும், இயற்கை வளங்களான மரங்கள், மலைப்பாறைகள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்யும் பழக்கத்தை அரசியல் கட்சியினர் கைவிட்டு விடுவார்கள் என்பதிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

இயற்கை வளங்களில் விளம்பரம் செய்வதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அவ்வாறு விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகளிடமிருந்து அந்த விளம்பரங்களை அழிப்பதற்கான தொகையை வசூலிக்க வேண்டும்.

எனவே, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து முறையாகக் கட்டணத்தை வசூல் செய்ய ஏதுவாக, மலைப்பாறைகள் உள்ளிட்டவற்றில் யாரெல்லாம் விளம்பரம் செய்துள்ளனர்? எந்த அளவுக்கு விளம்பரம் செய்துள்ளனர்? உள்ளிட்ட விவரங்களைத் தமிழக அரசு முதலில் திரட்டவேண்டும்.

மேலும், இந்த வழக்குத் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் அறிக்கைகளை ஆராய்ந்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், மாநில, மாவட்ட அளவில் குழுக்களை உருவாக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

எனவே, இதுகுறித்து தமிழக அரசின் கருத்துகளை, அரசு வழக்குரைஞர் கேட்டுத் தெரிவிக்கவேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள பதிவுசெய்த, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களையும் பட்டியலாக அவர் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.