Show all

இரண்டாம் உலகப் போர் காலத்து நாஜி ரயில்

தங்கம், விலைமதிப்பற்ற கற்கள், துப்பாக்கிகள் நிரப்பப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்து நாஜி ரயிலை கண்டுபிடித்திருப்பதாக 2 பேர் கூறியிருப்பதாக போலந்து நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 1945ஆம் ஆண்டில் போலந்து நகரமான வ்ரோக்லோவை சோவியத் படைகள் நெருங்கியபோது, இந்த ரயில் அப்பகுதியில் காணாமல் போனது. இந்த ரயிலை கண்டுபிடித்திருப்பதாக தங்களுக்கு இருவர் தகவல் கூறியிருப்பதாக தென் மேற்கு போலந்திலிருக்கும் ஒரு சட்ட நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த ரயிலில் இருக்கும் பொக்கிஷத்தில் 10 சதவீதத்தை தங்களுக்கு தர அந்த நபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக போலந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரவிருந்த காலத்தில் க்ஸியாஸ் என்ற கோட்டைக்கு அருகே தங்கமும் விலையுயர்ந்த கற்களும் நிறைந்த ரயில் ஒன்று மாயமானதாக கதைகள் நிலவிவந்தன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் கூறப்படும் ரயில் பற்றிய தகவல்கள், காணாமல் போன ரயில் பற்றிய தகவல்களுடன் ஒத்துப் போகிறது. க்ஸியாஸ் கோட்டையிலிருந்து 3 கி.மீ. தூரத்திலிருக்கும் வால்ப்ரைச் நகரில் உள்ள வழக்கறிஞர்களின் அலுவலகத்திற்குத்தான் இந்த கண்டுபிடிப்புப் பற்றிய தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், ஆனாலும் இது குறித்துத் தொடர்ந்து கண்காணிக்கப்போவதாகவும் வால்ப்ரைச்சின் உள்ளூர் தலைவரான ரோமன் ஸெலேமெய் கூறியிருக்கிறார்.

ரயிலைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லும் இரண்டு பேரில் ஒருவர் போலந்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயில் ஒரு சுரங்கத்தில் செல்லும்போது மாயமானதாகவும் ரயிலில் தங்கமும் அபாயகரமான பொருட்களும் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.