Show all

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்கும்

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்கும் என்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

அரசுத்துறைகள் தொடர்பான மானிய கோரிக்கைகளை விவாதித்து நிறைவேற்றுவதற்காக சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு குறைவாகவே இருப்பதால் இந்த கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மது விலக்கு பிரச்சனையை இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக எழுப்பும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பதை 24-ந்தேதி அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

இந்த சட்டசபை கூட்டத்தொடரில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்ள உள்ளார். சென்னையில் நேற்று தே.மு.தி.க. சார்பில் நடந்த உண்ணாவிரதத்தில் பேசிய அவர் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பேன் என்றார்.

ஆனால் இந்த சட்டசபை கூட்டத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை கூட்டத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி அவர்களை கூட்டத்தொடர் முழுவதும் நீக்கி வைத்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அந்த கூட்டத்தொடர் இன்னும் முடித்து வைக்கப்படவில்லை.

எனவே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இந்த சட்டசபை கூட்டத்திலும் பங்கேற்க முடியாது.

சபாநாயகர் தனபால் இந்த உத்தரவை பிறப்பித்த போது தே.மு.தி.க. தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் சபையில் இல்லை. எனவே அவர் இந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கலாம். அதே போல் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.