Show all

பாக்ஸ்கான் ஒப்பந்தமே மகாராஷ்டிராவின் மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீட்டு ஒப்பந்தம்

உலகின் மிகப்பெரிய ஒப்பந்த முறை எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பாளராக இருந்து வருகிறது தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம்.

ஏற்கனவே, பல முன்னணி செல்போன் பிராண்டுகளுக்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கி வரும் இந்நிறுவனம் ஐபோன், ஐபேடு மற்றும் அமேசானின் கிண்டில் பேடுகளை தயாரித்து கொடுப்பதற்காக இந்தியாவில் ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்சாலைகளை நிறுவ முடிவு செய்துள்ளது. வரும், 2020-ம் ஆண்டுக்குள் இந்த தொழிற்சாலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதுதவிர, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் டேட்டா சென்டர்களையும் துவங்க திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், மகாராஷ்டிராவில் ரூ.31,500 கோடி முதலீட்டில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது பாக்ஸ்கான்.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்சாலைகள் நடைமுறைக்கு வந்தால் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், பாக்ஸ்கான் தொழிற்சாலைக்காக 1500 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் மும்பையிலோ அல்லது புனேவிலோ தேர்வு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் டெர்ரி கவ் ஏற்கனவே இந்த வார துவக்கத்தில் இந்தியா முழுவதும் 2 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை நிறுவ இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் ஒப்பந்தம் போட்டிருப்பது குறித்து கூறுகையில், நான் தனிப்பட்ட முறையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 7 முறை பட்னாவிஸ் அவர்களை சந்தித்து இருக்கிறேன். அவரது சிறந்த தலைமையில் மகாராஷ்டிராவில் நிதிவசதி நன்றாக இருப்பதை கண்டறிந்தேன். மேலும், அங்கு சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் இரண்டு துறைகளையும் ஒருங்கிணைக்கும் திறமையான மனிதவளம் இருப்பதையும் தெரிந்து கொண்டேன். அதுவே இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது என தெரிவித்தார்.

தற்போது பாக்ஸ்கான் நிறுவனத்துடன் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தமே மகாராஷ்டிராவின் மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீட்டு ஒப்பந்தமாக கருதப்படுகிறது. பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களின் முயற்சியாக இந்தியாவில் மல்டி பில்லியன் டாலர்கள் முதலீடு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.