Show all

ஐ.எம்.எப் உலகவங்கிக்கு மாற்றான பிரிக்ஸ் வங்கி தொடக்கம்

பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காயில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 100பில்லியன் டாலர்கள் வங்கியாகும்.வளரும் பொருளாதாரங்களின் உள்கட்டமைப்பு நிதியுதவிகளுக்காக பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) இந்த புதிய வளர்ச்சி வங்கியை (என்டிபி) சீனாவின் ஷாங்காய் நகரில் தொடங்கியுள்ளது.

பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப், மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு மாற்று வங்கியாக இது செயல்படும். ஷாங்காயில் நடைபெற்ற தொடக்க விழாவில் சீன நிதியமைச்சர் லூ ஜீவெய், ஷாங்காய் நகர மேயர் யாங் சியாங் வங்கியின் முதல் 5 ஆண்டுகால தலைவர் கே.வி.காமத் ஆகியோர் பங்கேற்றனர்.ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் உயரதிகாரியான கே.வி.காமத், கூறும்போது, ‘நாடுகள் நெருக்கமான ஒத்துழைப்புகளை அளிக்க வேண்டும். எங்கள் உறுப்பினர்களின் கோரிக்கைகளை கவனத்துடன் கேட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவிருக்கிறோம்” என்றார்.

சீன நிதியமைச்சர் லூ ஜீவெய் கூறும்போது, “இந்த புதிய வளர்ச்சி வங்கி ஏற்கெனவே இயங்கி வரும் பன்னாட்டு நிதியமைப்புகளுக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாகச் செயல்படும், நிர்வாக முறைகளில் புதிய முறைகளைக் கடைபிடிக்கவுள்ளோம். வளரும் நாடுகளில், தேவையுள்ள நாடுகளுக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு இந்த வங்கி உதவும். தொடக்கத்தில் 50 பில்லியன் டாலர்களுடன் தொடங்கப்படுகிறது, அடுத்த 2 ஆண்டுகளில் இது 100பில்லியன் டாலர்களாக அதிகரிக்கப்படும்.

இந்த தொடக்க முதலில் பிரிக்ஸ் நாடுகள் சரிசமமான பங்களிப்பு செய்யும்” என்றார். இந்த 5 நாடுகளுக்கும் வங்கியின் நிர்வாகத்தில் சரிசம பங்கு இருக்கும். அதாவது நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கில் எடுத்துக் கொள்ளாதவாறு சரிசம வாய்ப்பு நிர்வாகத்தில் இருக்கும் என்று காமத் தெரிவித்தார். இந்த புதிய வளர்ச்சி வங்கி உருவாக்கத்தை உலக வங்கி வரவேற்றுள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.