Show all

சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி? காஞ்சீபுரம் மாநாட்டில் விஜயகாந்த் அறிவிக்க இருக்கிறார

சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து காஞ்சீபுரம் மாநாட்டில் விஜயகாந்த் அறிவிக்க இருக்கிறார்.

 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவி, 10 தொகுதிகளில் வைப்புத்தொகையை பறி கொடுத்தது. இந்தத் தேர்தலில் 5 விழுக்காடு வாக்குகளே தே.மு.தி.க. பெற்றது. எனவே அக்கட்சி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை கூட்டணியுடன் எதிர்கொள்வதையே விரும்புகிறது.

 

பாரதீய ஜனதா கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று அக்கட்சி முன்னணி தலைவர்களும், மக்கள் நலக்கூட்டணிக்கு வர வேண்டும் என்று அந்த கூட்டணி தலைவர்களும், தி.மு.க.வுக்கு வர வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதியும் வெளிப்படையான அறிவிப்புகளை வெளியிட்டு, விஜயகாந்தின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

 

நேற்று முன்தினம் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக மீண்டும் அமித்ஷா பதவியேற்றதற்கு விஜயகாந்த் முதல் ஆளாக தனது வாழ்த்தை பதிவு செய்தார். இந்த வாழ்த்து பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

     அதேநேரத்தில் பொதுக்கூட்டங்களில் தி.மு.க.வை விமர்சனம் செய்வதையும் விஜயகாந்த் குறைத்து உள்ளார். வைகோ உள்ளிட்டோருடன் நட்பும் பாராட்டி வருகிறார். எனவே விஜயகாந்த் கூட்டணி குறித்து என்ன முடிவு எடுப்பார்? என்பது கேள்வி குறியாகவே உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகளே தெரிவிக்கிறார்கள்.

 

இந்தநிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தே.மு.தி.க. மாநாடு காஞ்சீபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

 

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும்போது, மாநாடு நடத்தி, தொண்டர்களிடம் கருத்து கேட்டபிறகே முடிவு செய்தார். எனவே இந்த மாநாட்டிலும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டபிறகே அவர் முடிவு செய்ய உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.