Show all

என் ஒரேஅடையாளம் தமிழ்மொழி!

நாம் படைக்கப் பட்டதான கருதுகோளில் தமிழர்க்கு உடன்பாடில்லை. நாம் தான்தோன்றியாக தோன்றுவதற்கு நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என ஐந்து ஆற்றல்களை முன்வைத்தார்கள். நிலம், நீர், தீ, காற்று எனும் நான்கும் தான்தோன்றி இயக்கம் உடைய ஆற்றல்கள். அவை: வடிவம், எல்லை, இயக்கம் உடைய பொருள்கள்.

குவளை குவளை வடிவில் உயரக் கட்டுமானம்
உச்சியில் சிலுவை 
பளிச்சென்று தூய்மை
அது கிறத்துவர்களின் தேவலயமாம்
ஒருமுறை உள்ளே சென்று பார்க்க வேண்டும் 
என்று ஆசை வருகிறது. 
பெசன்ட் நகர் கடற்கரையில் 
அப்படியொரு வாய்ப்பும் கிடைத்தது.
பக்கத்து வீட்டுகாரர் 
தான் கிறித்துவர் என்று 
கிறத்துமஸ் விழாவிற்கு
கேக் வெட்டிக் கொண்டாட 
என் குடும்பத்தாரை அழைத்த போது,
நீங்களும் வாருங்கள் அப்பா என்று 
எனக்கும் அன்பழைப்பு
சென்று மகிழ்ந்தேன்.
உருண்டையைக் கவிழ்த்திய வடிவில் 
பிரம்மாண்டக் கட்டுமானம்
உச்சியில் பிறைநிலா
ஆங்காங்கே பச்சைநிறக் கொடிகள்
அது முகமதியர்களின் பள்ளி வாசலாம்.
நான் பால் வணிகம் செய்த போது
சொந்த ஊர் மேட்டூர் அணையில்
பதினாறு கண்பாலம் சார்ந்து
அமைந்திருந்த பள்ளி வாசலுக்கு 
அன்றாடம் பால் வழங்கச் செல்வேன்
ரம்ஜான் வந்த போது 
கொடுத்தார்கள் நோன்புக் கஞ்சி
மற்றம் ஊண்புலவு.
சென்னைக்கு வரும்வரை 
பல ஆண்டுகள் தொடர்ந்தது அந்த வாய்ப்பு
மருதமலை முருகன் எனது விருப்ப தெய்வம்
திருந்செந்தூர் செல்லமட்டும் 
இன்னும் வாய்ப்பு அமையவில்லை
மற்ற ஐந்துபடை வீடுகளுக்கும் 
சென்று மகிழ்ந்திருக்கிறேன்.
சில பல சின்னத் திருப்பதிகள் 
பெரிய திருப்பதி சிலமுறை சென்றதுண்டு
சென்னையில் 
ஹரே கிருஷ்ணா கோயிலில் 
பாதுகாப்பு பணியில் இருந்த காலமுண்டு
பலநேரம் சாப்பாடு கோயிலில்தான்.
திருவண்ணாமலை சிவன் கோயிலுக்குப் போனதுண்டு
அடிக்கடி எங்கள் பகுதி 
தேனுபுரிசுவரர் கோயில்தான் 
பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றுக்கான கோயில்
தமிழ்மெய்யியல் சொல்லும் கடவுள்-
உருத்து வந்து ஊட்டும்
விசும்புதெய்வம் 
என் பிள்ளைகள்.
தமிழ் மெய்யியல் சொல்லும் இறை-
தந்திரம், மந்திரம், எந்திரம், இந்திரம், உருத்திரம் 
என்னும் ஐந்திர ஆற்றல்கள்.
தமிழ்மெய்யியல் சொல்லும் தெய்வங்கள்-
குலதெய்வம் பச்சையம்மன்
ஊர்த்தெய்வம் எல்லையம்மன்
என்தெய்வம் அம்மாவும் அப்பாவும்
தமிழ்மெய்யியல் தந்த வணக்க வடிவம்
நடுகல்.
கடவுள் என் உயிர்,
இறை என் ஆற்றல்,
தெய்வம் என் வடிவம்.
நான் இறந்தால் 
எனக்கு உண்டு நடுகல்.
என் பிள்ளைகளுக்கு நான் தெய்வம்.
என் ஒரே அடையாளம்
தமிழ்மொழி!
என்தாய் தன் நாவசைத்து
தன் உயிர்க்காற்றால் 
உங்கு உங்கு என்று
எனக்கு ஊட்டிய அறிவு.
என் தாய்மொழி.
என் ஒரே அடையாளம்
தமிழ்மொழி!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.