Show all

தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து வடித்த, படித்த கட்டுரை இதுதான்

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து வடித்த, படித்த கட்டுரை இதுதான்.

இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து விட்டு, ஆண்டாள் எழுதிய திருப்பாவையையும், நாச்சியார்கோவையையும் படித்துப் பார்த்தால் பாடலாசிரியர் வைரமுத்துவே ஆண்டாளுக்கான அரண். பாஜகவினர் ஆண்டாளுக்கான முரண் என்பது தெளிவாகப் புரிந்து விடும்.

ஆண்டாள் ஹிந்துத்துவவாதி அல்லள். அன்றைக்கு இருந்த வைஷ்ணவசமய வாத பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான போராளி. அவர்கள் தனது போராட்டத்திற்கு தன் தாய்த்தமிழோடு, திருமாலையே கருவியாக்கிக் கொண்டார் என்பதே உண்மை. அதையே பாடலாசிரியர் வைரமுத்து வடித்த இந்தக் கட்டுரை நமக்கு உணர்த்துகிறது.

ஆண்டாளுக்கு பாஜகவினர் உரிமை கொண்டாடுவது பட்டியில் இருந்து தப்பித்து வந்த வெட்டப்படப் போகிற ஆட்டுக்கு பட்டிக்காரன் உரிமை கொண்டாடுகிற கதைதான். அன்றைக்கு ஆண்டாளை சமய ஆணாதிக்கத்திற்கு உட்படுத்திய கூட்டத்தின் வாரிசுகள் தாம் இன்றைய இந்த பாஜக கூட்டம்.

இன்றைக்கும் தமிழர் யாரும் நுழைய முடியாத கோயில் கருவறைக்குள் அன்றே நுழைந்த தமிழ்ப் போராளிதான் ஆண்டாள்.

தமிழர்கள் இந்த எதிரிகளை கவனமாக புரிந்து கொள்வார்கள். இந்தக் கூட்டங்களுக்கு நோட்டாவிற்கு தரும் மரியாதை கூட தரமாட்டார்கள். வீணாய் போன ஊடகங்கள் தான் இந்தக் கூட்டத்தின் வாய்ச்சவடால்களுக்கும் களம் அமைத்துத் தருகின்றன.

மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் - விலங்குகள் - பறவைகள் - தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது.

புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மார்கழியின் அதிகாலை மனோகரமானது. 
தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது;
தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது; 
இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது; 
கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. 
தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது.
"இன்னுமா உறக்கம்! 
எல்லே இளங்கிளியே! 
எழுந்து வா வெளியே' என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது.
"மார்கழி நீராட வாரீரோ மங்கையரே' என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது.

அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். 
இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. 
இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.
பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு.

கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு.
"எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.

"நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால், 
திங்கள் மும்மாரி பெய்யும்; 
நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்; 
வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும், 
ஆதலால் - மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்'
- இப்படி உயிரியல் - வாழ்வியல் - சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் பாவை நோன்பு பார்க்கப்படுகிறது.

வைணவத்தின் வளர்ச்சியில் திருப்பாவை செல்வாக்குற்றது
அல்லது
திருப்பாவை செல்வாக்குற்றதில் வைணவம் வளர்ந்தது.
தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் ஆறாம் - ஏழாம் நூற்றாண்டுகளைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது.

இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு அந்த நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது. 
அறம்பற்றி நடந்த தமிழர் இறைபற்றி நடக்கத் தலைப்பட்டதும் இந்த நூற்றாண்டிலேதான்.
சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது.

கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற "மெய்ஞ்ஞானம்' வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி இறங்கி வந்தது.

யாகம் - யக்ஞம் - தவம் - வேள்வி - விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் - காருண்யம் - சௌலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுற முடியும் என்ற புதிய சலுகை மக்களிடம்

தமிழ்ப்பரப்பில் முன்னெங்கும் கேளாத இப்பெண்மொழி முதன்முதலாய்ப் பெரியாழ்வார் பெண்ணால் பேசப்படுகிறது. 
இப்படி ஒரு விடுதலைக்குரல் எப்படிச் சாத்தியம்? இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்?
ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வார்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார்.

ஆனால் மொழியின் குழைவிலும், தமிழின் அழகிலும், உணர்ச்சியின் நெகிழ்விலும், 
உரிமையின் தொனியிலும் ஆணாழ்வார்களை விடவும், பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே! யாது காரணம்?
"தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே' 
என்ற குலசேகர ஆழ்வார் குரலில், 
ஒரு பக்தனின் முக்தி வேட்கை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்
என்ற பூதத்தாழ்வார் பாசுரத்தில் ஒரு தொண்டுள்ளத்தின் உருக்கமே தூக்கலாய் நிற்கிறது.

வண்டூர் உறையும் பெருமாளுக்குக் குருகினங்களைத் தூதுவிடும் நம்மாழ்வாரின் நாயகன் நாயகி பாவத்தில் உண்மையைத் தாண்டி உணர்ச்சி வினைப்படவில்லை. திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது. 
ஆனால் ஆண்டாள் உணர்ச்சி என்பது வெள்ளம்; 
மலை உச்சியிலிருந்து பள்ளம் தேடித் தாவும் வெள்ளம்.

அது கட்டற்ற காட்டாறு. 
இதனால்தான் வைணவ ஆச்சாரியார்கள்
"ஆழ்வார்களின் பக்திநெறி மேட்டுமடை ஒக்கும்; 
ஆண்டாளுடையதோ பள்ளத்துமடை ஒக்கும்' 
என்று திளைத்துத் தெளிந்து தெரிவிக்கிறார்கள்.
ஆழ்வார் பாசுரமோ பெரும்பாலும் ஆற்றுப்படுத்துவது. ஆண்டாளுடையதோ ஐக்கியப்படுவது. ஆழ்வார் பாசுரங்களோ அடிமையுறுவதில் ஆனந்தம் காண்பன. ஆண்டாள் பாசுரங்களோ விடுதலைக் குரலின் வீச்சுடையன.

ஒருத்தியால் பாடப்பெற்றதென்றாலும் திருப்பாவைக்கும் நாச்சியார் திருமொழிக்கும் அடிப்படை வேறுபாடு ஒன்றுண்டு. 
நாச்சியார் திருமொழி காதல் லயத்தில் கனன்ற பாடல்கள்.

அவை பெரும்பாலும் தன்னுணர்ச்சியில் விளைந்தவை. திருப்பாவையோ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பொது உணர்ச்சியில் பூத்தவை.

"மல்லாண்ட திண்டோள் மணிவண்ணனுக்கென்றே சில்லாண்டு வளர்ந்த செல்வி கண்ணனையே கணவனாய் வரிப்பேன்' 
என்று கனவு கண்டாள்.
"அவரைப் பிராயம் தொட்டு ஆர்த்தெழுந்த தடமுலைகள் துவரைப் பிரானுக்கே' என்று காதல் வஞ்சினம் கண்டாள். 
அவன் தோள்சேர என்ன வழி என்று எண்ணிக்கிடந்தவள் ஆயர்மங்கையர் கைக்கொள்ளும் பாவை நோன்புற்றாள். அவளுக்குத் திருவில்லிபுத்தூரே ஆயர்பாடி ஆயிற்று. 
தன்னையும் தம் தோழியரையும் ஆயர் பாவையர் ஆக்கினள். வடபெருங்கோயிலான் திருக்கோயிலே நந்தகோபன் குடிலாயிற்று.

கல்லான கடவுளே கண்ணனாகினான். அகமும் புறமும் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ளக் கடவுளை ஓர் ஊடகமாய்க் கைக்கொள்கிறார்கள் ஆயர்குலத்துத் தாயர்கொழுந்துகள்.

"நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டுநாம் முடியோம்; 
செய்யா தனசெய்யோம்; 
தீக்குறளை சென்றோதோம்'
-என்று பெண்மைக்கெல்லாம் பொதுவாகத் தன்மைப் பன்மையில் பாடிக்கொள்கிறாள்.

ஆனால் திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்?

கன்னி

இங்கும் சில வினாக்கள் விளைகின்றன.
கடவுள் மனித வடிவில் வந்து மனிதப் பெண்ணை மணந்து போவது உண்டு; வள்ளியும் முருகனும் போல. 
மனித வடிவத்திலேயே கடவுள் காதல் உண்டு; 
கண்ணனும் ராதையும் போல. 
ஆனால் கடவுள் திருவுருவத்தோடு ஒரு மானிடச்சி கலந்தாள் என்பது பூமிதனில் யாங்கணுமே காணாதது.
ஆனால், 
அர்ச்சாவதாரமாகிய விக்கிரகத்தோடு குருதியும் இறைச்சியும் கொண்ட ஒரு மானிடப் பெண் கலந்ததுண்டா என்ற கேள்விக்கு விடைசொல்ல ஓர் ஆவணமும் இருக்கிறது.
"குலசேகரப் பெருமாள் தமது புத்ரி சோழவல்லியை அழகிய மணவாளப் பெருமாளுக்குத் திருமணம் செய்வித்துத் தமது சொத்தை ஸ்ரீதனமாகக் கொடுத்துத் திருமண்டபம் கட்டிய செய்தியும்'
- என்ற குறிப்பு எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிப்பித்த
"கோயிலொழுகு' நூலில் காணப்படுகிறது.
ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், 
ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள். 
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட
Indian Movement: some aspects of dissent, protest and reform 
என்ற நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :
Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple.
- பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாடார்கள். 
ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்.
சமண - பௌத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறாய்த் துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகளின் குறியீடாகத்தான் ஆண்டாளைப் பார்க்கலாம். ஆண்டாளின் பிறப்பு மறைவு இரண்டின் மீதும் விடை அவிழாத வினாக்கள் இருந்தாலும் ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது. "எண்ணம் திண்ணியதாயின் எண்ணியதெய்துவாய்' என்ற நிபந்தனையற்ற நம்பிக்கையின் நிதர்சனமாக ஆண்டாளைப் புரிந்துகொள்ளலாம்.

"கண்ணன் புரிந்துகொள்ள முடியாத ஒரு கடவுள் தத்துவம். 
தன் காலத்திற்கு முன்கூட்டியே பிறந்துவிட்டவன் கண்ணன். 
இன்னும் சொல்லப் போனால் மிகமிக முன்கூட்டி. அதனால் அவனைப் புரிந்துகொள்வது வருங்காலத்தின் சாத்தியமே தவிர நிகழ்காலத்தினதன்று' 
என்ற ஓஷோவின் கூற்று உண்மையாயின் கண்ணனைப் புரிந்துகொண்ட இறந்த காலத்தின் எதிர்காலம் என்றே ஆண்டாளைச் சொல்லத் தோன்றுகிறது.
ஒன்றையே நினை
- ஒருமுகப்படு
- ஒப்புக்கொடு
- நம்பு
- கருதியதில் உறுதிகொள்
- வினைப்படு

வெற்றியுறு என்ற தத்துவம் ஆண்டாளுக்கும் கண்ணனுக்கும் மட்டும் உரியதன்று. 
தலைவனுக்கும் தொண்டனுக்கும், நண்பனுக்கும் நண்பனுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், தந்தைக்கும் மகனுக்கும், சத்தியத்திற்கும் வாழ்வுக்கும் இதுவே உரியது.
எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும், 
மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான்.
இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும், கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் கழித்த பிறகும் ஆண்டாள் அருளிச்
செல்லும் அருஞ்செய்தி இதுதான்.

-வைரமுத்து

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,673

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.