Show all

ஆன்மீகம் என்பது தமிழா! தமிழில் என்னவென்று சொல்லலாம்

17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஆன்மீகம் என்பது வடமொழிச் சொல். அந்தத் துறையை தமிழில், தற்காலத்தில், ஆன்மவியல் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள்.  பிற்பகுதியை மட்டும் தமிழாக்குவோர்களுக்கு  முற்பகுதியான ஆன்மாவை உயிர் என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது. உயிர் என்று சொன்னால் இவ்வளவுதானா என்று ஆகிவிடுமாம். அந்தத் துறையை கமுக்கம் சார்ந்ததாகவே வைத்துக் கொள்ள வேண்டுமாம்.

எழுத்துக்கே உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்து என்று பெயரிட்டு, இந்த கமுக்க ஆன்மீகத்தின் முக்கால் பகுதியை போட்டு உடைத்து விடுகின்றனர் தமிழ்முன்னோர். 

ஆன்மீகம் என்பதை நேரடியாக மொழி பெயர்த்து உயிரியல் என்றும் சொல்லலாம். உயிரியலா? வேறு எங்கேயோ கேள்விப் பட்டது போல் இருக்கிறதா? ஆம் பயாலஜி என்கிற உயிரிகளைப் பற்றி படிக்கிற பாடப்பிரிவை உயிரிஇயல் என்று சொல்லாமல், உயிரியல் என்று தவறாக மொழிபெயர்த்து பயன்படுத்தி வருகிறார்கள் நமது கல்வியாளர்கள்.

இயல் என்று சொன்னால் இயமும், இயக்கமும் என்று பொருள். இயம் என்று சொன்னால் கோட்பாடு என்று பொருள். ஆங்கிலத்தில் தியரி என்று சொல்லுவார்கள். இயக்கம் என்பது நடைமுறை. ஆங்கிலத்தில் பிராக்டிகல் என்று சொல்லுவார்கள். 

தியரி மற்றும் பிராக்டிகல் சேர்ந்த பாடப் பிரிவுதான் சயின்ஸ். ஆங்கிலேயர் சயின்ஸ் என்று இன்று சொல்வதைதான் அன்று தமிழர்கள் இயல் என்று வழங்கி வந்தார்கள்.

இன்றைக்கு நமது கல்வியாளர்கள் சயின்சை அறிவியல் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். இப்படி மொழிபெயர்த்து வழங்கும் போதே அந்தத் துறை எமது முந்தையர்களிடம் இல்லை என்பதை ஒப்புக் கொள்வதை சேர்த்துக் கொள்வதாகும். 

தமிழர்கள் இயற்றமிழ் என்று வழங்கியது தான் சயின்ஸ். நாம் வேண்டுமானால் ஜெனரல் சயின்ஸ் என்பதாக இயல்அறிவு என்று சொல்லலாம்.

அறிவியல் என்று சொன்னால் அது அறிவைப் பற்றி படிக்கிற துறையாகி விடும். அந்த அறிவியல் துறையும் நமக்கு உண்டு.

ஆக சயின்ஸ் என்பதை இயல்அறிவு என்றும், பயாலஜை உயிரிஇயல் என்றும், சொல்லுவதே சரி. 
பிசிக்சை இயற்பியல் என்று சொல்லுகிறோம். இதற்கு சயின்சைப் பற்றிய சயின்ஸ் என்று பொருளாகி விடும். இயல் என்றாலே சயின்ஸ். இயல் இயல் என்றால் சயின்சைப் பற்றிய சயின்ஸ் தானே. பிசிக்சைப் பரியியல்  என்று சொல்ல வேண்டும். கெமிஸ்டிரியை வேதியியல் என்று சொல்ல வேண்டும். ஆன்மீகத்தை உயிரியல் என்றும்கூடச் சொல்லாம்

ஆனால் உலகம் எடுத்துச் செல்லுகிற ஆன்மீகத்தை உயிரியல் என்று அறுதியிட்டுச் சொல்லும் வகைக்கு அது நிறைவு செய்யப்படவில்லை. நிறைய கருத்து முரண்பாடுகளோடு வெறுமனே தேடலாகவே இருந்து வருகிறது. 

தமிழ்முன்னோர் முத்தமிழில் மூன்றாவது தமிழான இயற்றமிழிலேயே, வெளிப்படையான, இயற்கையின் இயலை 'இயல்அறிவு' என்று இயற்கையின் கோட்பாடு நடைமுறைகளை நிறுவியிருந்தனர். 

உலகின் முதல்அணைக்கட்டான கல்லணையைக் கட்டிய தமிழனின் கல்வி அதற்கானதாக அமைந்திருந்தது. இதைத்தான் இன்று சயின்ஸ் என்கிற தலைப்பில் பேரளவாக ஐரோப்பியரும் உலகில் பலரும் முன்னெடுத்து வரும் இயற்கையின் இயலை கல்வியாக்கி வருகிறோம்.

தமிழ்முன்னோர் முத்தமிழில் மூன்றாவது தமிழான இயற்றமிழிலேயே, கமுக்கம் சார்ந்த உலகத்தோற்றம், உயிரிகள்தோற்றம், ஆறாறிவு வரையிலான உயிரிகள் பெருக்கம் என்பவைகளையெல்லாம், இயல்கணக்கு என்று தலைப்பிடுகிற வகைக்கு, ஆய்ந்து நிறுவி வந்தனர்.

அந்த அடிப்படையிலான மனித முன்னேற்றத்திற்கு சோதிடம், சாதகம் உள்ளிட்ட முதலாவது முன்னேற்றக்கலை, கணியம் என்கிற இரண்டாவது முன்னேற்றக்கலை, மந்திரம் என்கிற மூன்றாவது முன்னேற்றக்கலை அனைத்தையும் தெள்ளத்தெளிவாக நிறுவி முடித்திருந்தனர் தமிழ்முன்னோர். அந்த அடிப்படையில் தமிழர் வாழ்க்கை மிக மக எளிதாக முன்னெடுக்கப்பட்டு வந்தது ஆரியர் உள்ளிட்ட அயலவர் வரவுவரை.

தமிழர் நிறுவி முடித்த இந்த 'இயல்கணக்கு' துறையைத்தான் இன்றை உலகினர் ஆன்மீகம் என்கிற தலைப்பில் தேடலைத் தொடங்கி- ஒட்டுமொத்த தெளிவுக்கு முயலாமலும், இது இயல்அறிவுக்கு புறம்பான துறை என்று தள்ளி வைத்தும், ஒவ்வொரு வழிகாட்டியும் அவரவர் சிந்தனைக்குத்தெளிவான செய்திகளைப் பேசியும், அதற்கு மதம் மற்றும் அரசியல் கோட்பாடு என்று வலுவான இயக்கம் கட்டியும் உலகில் ஏற்றதாழ்வை நிலைபெறச் செய்து வருகின்றனர்.   
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,086.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.