Show all

ஆன்மீகம் என்பது தமிழா! தமிழில் என்னவென்று சொல்லலாம்

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆன்மீகம் என்பது வடமொழிச் சொல். அந்தத் துறையை தமிழில், ஆன்மவியல் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள்.  பிற்பகுதியை மட்டும் தமிழாக்குவோர்களுக்கு  முற்பகுதியான ஆன்மாவை உயிர் என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது. உயிர் என்று சொன்னால் இவ்வளவுதானா என்று ஆகிவிடுமாம். அந்தத் துறையை கமுக்கம் சார்ந்ததாகவே வைத்துக் கொள்ள வேண்டுமாம்.

தமிழன் எழுத்துக்கே உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்து என்று பெயரிட்டு, இந்த கமுக்க ஆன்மீகத்தின் முக்கால் பகுதியை போட்டு உடைத்து விடுகிறான். 

மெய் எழுத்து தனித்து இயங்காது. உயிர் தனித்து இயங்கும் போது அது இசை. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள என்பன ஏழு சுரங்கள். அவையே தமிழிசைக்கு அடிப்படை. இசை என்பது மனங்கவரும் கலை. உயிர் மொய் எழுத்து இயங்கியே மொழியை உருவாக்குகிறது. இவையெல்லாமே கருத்தியல். ஆங்கிலத்தில் Spirituality என்பதை தமிழில் கருத்து முதல் வாதம் என்கிறோம். 

தமிழர்களுக்கு ஆன்மீகம் கருத்தியல் துறையாகவே இருந்தது. ஆன்மீகம் என்பதை நேரடியாக மொழி பெயர்த்து உயிரியல் என்றும் சொல்லலாம்.

உயிரியலா? வேறு எங்கேயோ கேள்விப் பட்டது போல் இருக்கிறதா? ஆம் Biology என்கிற உயிரிகளைப் பற்றி படிக்கிற பாடப்பிரிவை உயிரிஇயல் என்று சொல்லாமல், உயிரியல் என்று தவறாக மொழிபெயர்த்து பயன்படுத்தி வருகிறார்கள் நமது கல்வியாளர்கள்.

இயல் என்று சொன்னால் இயமும், இயக்கமும் என்று பொருள். இயம் என்று சொன்னால் கோட்பாடு என்று பொருள். ஆங்கிலத்தில் Theory என்று சொல்லுவார்கள். இயக்கம் என்பது நடைமுறை. ஆங்கிலத்தில் Practical என்று சொல்லுவார்கள். 

Theory and Practical சேர்ந்த பாடப் பிரிவுதான் Science. ஆங்கிலேயர் Science என்று இன்று சொல்வதைதான் அன்று தமிழர்கள் இயல் என்று வழங்கி வந்தார்கள்.

இன்றைக்கு நமது கல்வியாளர்கள் Science ஐ  அறிவியல் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். இப்படி மொழிபெயர்த்து வழங்கும் போதே அந்தத் துறை எமது முந்தையர்களிடம் இல்லை என்பதை ஒப்புக் கொள்வதை சேர்த்துக் கொள்வதாகும். 

தமிழர்கள் இயற்றமிழ் என்று வழங்கியது தான் Science. நாம் வேண்டுமானால்  general Science என்பதாக இயல்அறிவு என்று சொல்லலாம்.

அறிவியல் என்று சொன்னால் அது அறிவைப் பற்றி படிக்கிற துறையாகி விடும். அந்த அறிவியல் துறையும் நமக்கு உண்டு.

ஆக Science என்பதை இயல்அறிவு என்றும், Biology ஐ உயிரிஇயல் என்றும், சொல்லுவதே சரி. 

Physics- ஐ இயற்பியல் என்று சொல்லுகிறோம். இதற்கு Science-ப் பற்றிய Science என்று பொருளாகி விடும். இயல் என்றாலே Science. இயல் இயல் என்றால் Science-ப் பற்றிய Science தானே. Chemistryஐ  வேதியியல் என்று சொல்ல வேண்டும். ஆன்மீகத்தை உயிரியல் என்றே சொல்ல வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,014.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.