Show all

பணியிலிருந்து விடுவித்தது தேர்தல் ஆணையம்! 'ரபேல் ஊழல்' புத்தகங்களைப் பறிமுதல்செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை

'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' நூலை பறக்கும் படை அதிகாரிகள் தன்னிச்சையாக பறிமுதல் செய்ததாக தெரிவித்து, பறக்கும்படை அதிகாரிகளிடம் அதுகுறித்து விளக்கம் கேட்டுள்ள தேர்தல் ஆணையம் அவர்களை பணியிலிருந்து விடுவித்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

  20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜயன் என்பவர் எழுதிய 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' என்ற புத்தகம் பாரதி புத்தகாலயம் மூலம் நேற்று இந்து குழுமத் தலைவர் என்.ராம் சென்னை கேரள சமாஜத்தில் வெளியிடுவதாக இருந்தது. 

இந்நிலையில் திடீரென ஆயிரம் விளக்கு தேர்தல் பறக்கும் படையினர் காவலர்கள் துணையுடன் புத்தக நிறுவனத்தில் நுழைந்து வெளியீட்டிற்காக வைக்கப்பட்டிருந்த 142 புத்தகங்களைப் பறிமுதல் செய்வதாக எடுத்துச் சென்றனர். அதற்கான ஆவணம் ஏதும் வழங்கவில்லை.

இந்த நடவடிக்கையை இந்து குழுமத் தலைவர் என்.ராம் கண்டித்தார். இது குடிஅரசுக்கு எதிரான, சட்டவிரோத நடவடிக்கை. கருத்து உரிமை, பேச்சு உரிமைகளுக்கு எதிரான செயல் என அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினர்.

அது குறித்து பதிலளித்த தமிழக தேர்தல் அதிகாரி, புத்தகங்களைப் பறிமுதல் செய்வது சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையமோ, தமிழக தேர்தல் அதிகாரியோ எந்தவித உத்தரவும் இடவில்லை. இது சம்பந்தமாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் உடனடியாக அறிக்கை கேட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில்  ரபேல் புத்தகத்தை பறிமுதல் செய்தவர்கள் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உதவி செயற்பொறியாளர் கணேஷ், காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். புத்தகத்தை பறிமுதல் செய்த 4 பேரிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.

அவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொருத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தகம் தடை, பறிமுதல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் அறிக்கை அளித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,111.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.