Show all

நான் வாங்கிய முதல்நூல்!

பாடப்புத்தகங்களான தமிழ் கணக்கு, வரலாறு, புவியியல், இயல்அறிவு- தாண்டி நிறைய நிறைய புத்தகங்களை படிப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துக் கொண்டேயிருந்தது. அந்த வகைக்கு பாடப்புத்தகங்களுக்கு வெளியே நான் சொந்தமாக வாங்கியிருந்த புத்தகம் குறித்தது இந்தக் கட்டுரை.

17,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: எனக்கு நினைவு தெரிந்து: நான் அறிந்த முதல்கடை எனது வீட்டை ஒட்டியே அமைந்திருந்த திண்ணைக்கடை. அது மளிகை மற்றும் காய்கறிக்கடை ஆகும். அங்கு நாட்டுச்சருக்கரை, பொட்டுக்கடலை தேங்காய் பத்தை தேநீர்தூள் வாங்கி வருவது எனக்கு என்தாய் விதித்திருந்த வழக்கமான கடமை.

அந்தக் கடையோடு எனக்கு நீண்ட காலம்தொடர்பு உண்டு என்று நிறுவுவதற்கு அந்தக் கடையில் வைக்கப்பட்டிருந்த தினத்தந்தி நாளேடு அன்றாடம் படித்து வந்த நினைவுகள். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, சிந்துபாத் படக்கதை படிக்கத் தொடங்கி, நான்கு ஐந்தாம் வகுப்புகளில் தினத்தந்தி ஞாயிறு மலரில் வந்த தொடர்கதை கேள்வி பதில் பகுதி, ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் பகுதி, இரண்டாம் பக்கத்தில் தலைப்பில் வெளியாகும் சிந்துபாத் படக்கதை போல, வேறு பக்கங்களில் வரும் துப்பறியும் படக்கதையும் நினைவில் நிற்பவை. என்னை கவர்ந்த முதல் எழுத்தாளர் குரும்பூர் குப்புசாமி. அவரின் கதைகளில் குறும்பு, தமிழ், காதல் துள்ளி விளையாடும். 

அறியா அகவையில் நான் காதல் குறித்து அறிந்தது, அவரின் எழுத்துக்களில்தான். கதைத் தலைவன் பெயர் உதயசூரியன், கதைத்தலைப்பு நினைவில்லை, அவரின் அந்தப் புனை வரலாற்றுத் தொடர் என்;னை கற்பனை உலகில் கலங்கடித்த கதையாகும்.  

புதன் கிழமையானால் நானும் என்னை விட ஒன்னரை அகவை மூத்த என் அக்காவும் அந்தத் திண்ணைக்கடையில்  இருந்து இராணி கிழமை இதழ் வாங்கிக் கொண்டு வந்து என் நடு அண்ணனுக்குக் கொடுக்கப் போட்டி போடுவோம். என் நடு அண்ணனிடம், அந்தக் கிழமை இதழைக் கொண்டு சேர்ப்பதற்குள் நடுப்பக்கச் சிறுவர் பகுதி, அன்புள்ள அல்லி கேள்வி பதில், குரங்கு குசலா எல்லாம் படித்துவிடுவோம். 

என் நடு அண்ணன் எங்கள் குடும்பத்தில் அறிவாளர் என்று கொண்டாடப்படுபவர். அவரும் நிறைய படிப்பார். அப்போது தினத்தந்தி குழுமம் இராணிமுத்து என்ற மாதம் ஒரு முழுக்கதையை ஒரு ரூபாய்க்கு வெளியிட்டு வந்தது. அந்த வெளியீட்டை தொடர்ந்து வாங்கி வருவார் என் அண்ணன். அந்த வெளியீடுகளால் அகிலன், அமுதா கணேசன், பி.டி.சாமி, சாண்டில்யன், இப்படி நிறைய எழுத்தாளர்கள் என்னுள் வந்தார்கள். 

படிப்புத்துறை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. பாடப்புத்தகங்களான தமிழ் கணக்கு, வரலாறு, புவியியல், இயல்அறிவு- தாண்டி நிறைய நிறைய புத்தகங்களை படிப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துக் கொண்டேயிருந்தது. 

எங்கள் ஊரில் சிதம்பரனார் பூங்காவில் அமைந்த நூலகத் துறையின் நூலகம் ஒவ்வொரு ஞாயிறும் எனக்கு குதுகலம் தரும் இடமாக அமைந்தது. படிப்பில்- மூன்றாம் வகுப்பில் இருந்து நிர்பந்திக்கப்பட்ட ஆங்கிலப்பாடம் எனக்கு கொஞ்சம் இடர்பாடாகவே அமைந்தது. பள்ளி இறுதி வகுப்பில் மற்ற பாடங்களில் மிக நல்ல மதிப்பெண் பெற்றும், ஆங்கிலம் என்னை முதல்முறை தேர்ச்சி இழக்கச் செய்தது. அந்தத் தோல்வி என்னை துறைமாற்றிப் போட்டது தனியாக எழுத வேண்டிய கதை. 

இப்படி ஆங்கிலப்பாடம் வழங்கிய தேர்ச்சியின்மையால், துறைமாறி, தங்களுக்கு கிடைத்த ஆங்கிலத் தேர்ச்சியின்மையால் ஏற்பட்ட துறைமாற்ற வாய்ப்பு- தங்கள் பிள்ளைகளுக்கு அமைந்துவிடக் கூடாது என்பதற்காக, தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்விக்கு அனுப்பிய பெற்றோர்கள் நிறைய பேர்கள் தமிழ்நாட்டில் உண்டு. 

ஆனால் நான் அப்படிச் சிந்திக்காமல், சமூகத் தொடர்புக்காக கற்பிக்கப்படுகிற ஒருமொழிப்பாடத்தில் தேர்ச்சியை நிர்பந்திக்க வேண்டிய கட்டாயம் என்ன என்றே நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பேசி வருகிறேன். என் பிள்ளைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியே தந்து உயர்த்த வேண்டும் என்ற இலட்சியத்தில் வாகையும் சூடியுள்ளேன்.

இந்த நிலையால் எல்லாம் தமிழை என் அடையாளமாக தூக்கிப்பிடித்து தொடர்ந்து இயங்கி வருகின்றேன். இந்த வகையால் எழுது பொருள் கடைகள், எனக்கு மிக பிடித்த வகைகள். எனது உறவுகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு தூவல், எழுதுகோள், திருக்குறள், கதைப்; புத்தகங்கள், தமிழ் தமிழ் அகராதிகள் வாங்கிக் கொடுப்பது பிடிக்கும். அவைகளில், இந்தத் 'தமிழ் தமிழ் ஆங்கில அகராதி'தான் என்வாழ்க்கையில் முதலாவதாக நான் எனக்குச் சொந்தமாக பாடப்புத்தகங்களுக்கு வெளியே வாங்கிய முதல் புத்தகமாகும். 

இன்று என் நூலகத்தில் ஆயிரத்திற்கு மேலான நூல்கள் இருந்தாலும், எப்போதும் என்மேசையிலேயே எண்ணிம நூல்கள் பலவற்றைத் தாங்கியிருக்கிற மேசைக் கணினியோடு, இடம் பெறுகிற எழுத்து நூல் இந்தத் 'தமிழ் தமிழ் ஆங்கில அகராதி' ஆகும். நான் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிற புத்தகமும், அடிக்கடி பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிற புத்தகமும், அதிகம் புரட்டியிருக்கிற புத்தகமும், அதிகம் பாதித்து விட்ட புத்தகமும் இந்தத் 'தமிழ் தமிழ் ஆங்கில அகராதி'தான். 

இந்தப் புத்தகத்தின் ஐப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டாம் பதிப்புதான் நான் வாங்கிய புத்தகம் ஆகும். இந்தப் புத்தகத்தின் பெயர் 'லிப்கோ தமிழ் தமிழ் ஆங்கில அகராதி' என்பது. இதன் அப்போதைய விலை ஆறு ரூபாய் எண்பது காசுகள். இந்த நூல் 672 பக்கங்களையும் 84 பிற்சேர்க்கைப் பக்கங்களையும் கொண்டுள்ளது. பிற்சேர்க்கை பக்கங்கள் தமிழ் குறித்த ஏராளமான அடிப்படைத் தகவல்களின் தொகுப்பாகும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,056.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.