Show all

சீப்பைத் திருடினால் திருமணத்தை நிறுத்த முடியுமா! முடியும் என்று நிரூபிக்கிறது பாஜக நடுவண் அரசு.

திருமணம் என்பது ஒரு நெடிய செயல்முறை. சிலர் குறுக்கே புகுந்து அதை நிறுத்த முயல்வதை, சீப்பைத் திருடினால் திருமணத்தை நிறுத்த முடியுமா? என நையாண்டி செய்வதே இந்தப் பழமொழி. ஆனால் சீப்பைத் திருடி திருமணத்தை நிறுத்திக் காட்டும் வித்தை செய்து வருகிறது பாஜக நடுவண் அரசு. 

24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மருத்துவம் என்பது மனிதமனங்களில் ஊறிப்போயிருக்கிற ஒரு கலை. ஒரு முறை ஒரு மன்னனுக்கு ஒரு ஐயம் வந்ததாம். எல்லா மனிதருக்கும் ஈடுபாடான கலை எது என்று? அதை அறிந்து கொள்ள தனது அமைச்சரவையைக் கூட்டி அமைச்சர்கள் முன்னிலையில் தனது ஐயத்தை முன் வைத்தாராம். 

ஓவ்வொரு அமைச்சரும் நடனம், இசை, விளையாட்டு, ஓகம், சோதிடம், பேச்சாற்றல், கமுக்கவியல், பொது அறிவு, நுண்ணறிவு, இப்படி பலவற்றைச் சொன்னார்களாம். கடைசியாக ஒருவர் மருத்துவம் என்றாராம். மன்னருக்கு ஒரு உள்ளொலி தோன்றவே, சரிதான் நிரூபிக்க முடியுமா என்றாராம். 

நாளை ஒருநாள் யாருடனும் பேசாமல் இருந்து பாருங்கள் ;தெரிந்து கொள்வீர்கள் என்றாராம் அமைச்சர்.  மன்னர் அது போலவேயிருக்க, மன்னரின் தாயார் ஏனப்பா சோர்வாக இருக்கிறாய்? தலைவலியா? கிராம்பு பற்று போடவா? என்றாராம். மனைவியோ காய்சல் அடிக்கிறதா? ஏன்று கழுத்தை தொட்டுப் பார்த்து துளசிசாறு கொண்டு வரவா என்று கேட்டிருக்கிறார். இப்படி அவரை வழக்கமாக சந்திக்கும் ஒவ்வொருவரும் நோய் நாடி நோய் தணிக்கும் கலையை அவரவரின் அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவக் கலை வல்லவர்களாக இருக்கிறார்கள், அவரவர்கள் அனுபவப் பட்ட வகையில் மருத்துவத்தை   முன்னெடுக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டார் மன்னர். 

அதனால் தான், ஒவ்வொருவரோடும் ஒன்றியிருக்கிற மருத்துவத் துறையில் தானே சிறந்தவராக வேண்டும் என்று, மருத்துவத் துறையை தனது எதிர்காலமாகத் தேர்ந்தெடுக்கிற மாணவன் சிறப்பாக மாணவி அது இல்லை என்கிற போது நொறுங்கிப் போய் விடுகின்றனர். 

அந்தக்கனவு திடீரென்று தோன்றி, படீரென நடுவண் அரசின் நீட்டைப் போல குப்புறத் தள்ளுகிற விசயம் அல்ல. அது தவம் கூட அல்ல குலதெய்வத்தைக் கொண்டாடுகிற தெவம். 

வடபுல வாக்கு வங்கியை கொண்டிருக்கிற பாஜக, சீப்பைத் திருடி திருமணத்தை நிறுத்துகிற வேலையைப் போல, நீட் என்கிற ஒற்றைத் தேர்வை வைத்து தமிழக மாணவர்களின் குறிஞ்சி மலர் போன்ற 12 ஆண்டு தெவத்தை சீரழித்து, நொறுங்கிப் போய் மரணத்தில் முடிக்கும் உயிர்க்கொல்லியாக உலவ விட்டிருக்கிறது. மருத்துவக் கனவைச் சிதைக்க நீட்டை.

சீப்பைத் திருடி திருமணத்தை நிறுத்துவது போல, மிக எளிமையாக நீட் என்கிற ஒற்றைத் தேர்வின் மூலம், தமிழகத்தின் கல்வி உரிமையை களவாடிக் கொண்டிருக்கிறது பாஜக நடுவண் அரசு.

நிறுத்தப் பட்ட திருமண வீட்டு சோற்றுக்கு அலைகிற பாஜக சார்ந்த பரதேசிகள், அறிவுரை கூறுகின்றனர். மருத்துவம் மட்டுந்தாம் துறையா? ஏன்று மாணவர்களை சொல்லி வளர்க்க வேண்டுமாம். இந்த முறை இல்லாவிட்டால் என்ன அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் படுத்த வேண்டுமாம் மாணவர்களை! யாருடா கேட்டார்கள் நீட்? ஏங்கள் வரிப்பணத்தில் எங்கள் கல்லூரியில் சேர 12ஆண்டுகள் தெவமியற்றும் எங்களுக்கு எதற்கடா நீட் என்று கொதித்தெழ நாதியில்லாமல் இருக்கின்றார்கள் மருத்துவக் கனவில் தமிழக மாணவர்கள். சிலர் நொறுங்கிப் போய் விடுகின்றார்கள்.


-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,176.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.